மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: போலீசாரால் தேடப்பட்ட விடுதி உரிமையாளர் மர்ம சாவு ஆலங்குளம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு: போலீசாரால் தேடப்பட்ட விடுதி உரிமையாளர் மர்ம சாவு ஆலங்குளம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 July 2018 4:00 AM IST (Updated: 26 July 2018 5:35 PM IST)
t-max-icont-min-icon

பெண்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையாளர் ஆலங்குளம் அருகே கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆலங்குளம், 

பெண்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையாளர் ஆலங்குளம் அருகே கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விடுதி உரிமையாளர்

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 48). இவர் கோவை ஹோப் கல்லூரி பால ரங்கநாதபுரம் ஜீவா வீதியில் ‘தர்‌ஷனா’ என்ற பெயரில் பெண்கள் தங்கும் விடுதி நடத்தி வந்தார். இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் இளம்பெண்கள் என மொத்தம் 180 பேர் தங்கி இருந்தனர். இங்கு, கோவை தண்ணீர்பந்தல் ரோட்டை சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக இருந்தார்.

இவர், விடுதியில் தங்கியிருந்த 5 மாணவிகளிடம், விடுதி உரிமையாளர் மற்றும் சிலருடன் ஜாலியாக இருந்தால், தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, புனிதா, ஜெகநாதன் ஆகிய இருவரும் செல்போன்களை சுவிட்ச்–ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார், அவர்கள் எங்கு இருக்கிறார்கள், கடைசியாக யார், யாரிடம் பேசினார்கள்? என்பது குறித்த பட்டியலை தயார் செய்து வந்தனர். மேலும் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

கிணற்றில் பிணம்

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவலார்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கிணற்றுக்குள் இறங்கி அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்தது கோவை விடுதி உரிமையாளர் ஜெகநாதன் என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜெகநாதன் மற்றும் புனிதா ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

சரண் அடைய...

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெகநாதன் குற்றாலத்துக்கு வந்துள்ளார். பின்னர் ஆலங்குளத்தில் உள்ள ஒரு வக்கீல் மூலம் ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைய ஏற்பாடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்றுமுன்தினம் ஆலங்குளம் வந்த அவர் மறுநாள் (அதாவது நேற்று) கோர்ட்டில் சரண் அடைவதற்காக ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது தோட்டத்தில் இரவில் தங்கி இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த தோட்டத்தில் வைத்து ஜெகநாதன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாரியப்பன், ஜெகநாதனை பார்க்க வந்துள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லை. உடனே மாரியப்பன் தோட்டம் முழுவதும் ஜெகநாதனை தேடிப்பார்த்தும், அவரை காணவில்லை. அப்போது அங்குள்ள கிணற்றில் எட்டி பார்த்தபோது அங்கு ஜெகநாதன் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாரியப்பன், இதுபற்றி ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கொலையா?

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் விடுதி உரிமையாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story