குளச்சலில் 2–வது நாளாக கடல் சீற்றம் மீன்பிடி தொழில் பாதிப்பு


குளச்சலில் 2–வது நாளாக கடல் சீற்றம் மீன்பிடி தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 27 July 2018 4:30 AM IST (Updated: 26 July 2018 8:22 PM IST)
t-max-icont-min-icon

குளச்சலில் நேற்று 2–வது நாளாக கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கடல் சீற்றம் ஏற்பட்டது. ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால் பகுதியில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் மீனவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து நீடித்ததால் கடற்கரையில் வசிக்கும் மீனவர்கள் அச்சத்துடனேயே இருந்தனர்.

இதுபோல், குளச்சல், கொட்டில்பாடு, முட்டம் பகுதிகளில் கடல் அலை மிகவும் ஆக்ரோ‌ஷத்துடன் இருந்தது.


குளச்சல் பகுதியில் நேற்று 2–வது நாளாக கடல் சீற்றம் தொடர்ந்தது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்த வண்ணம் இருந்தன. பல அடி உயரத்தில் எழுந்த அலைகள் கடலுக்குள் அமைந்துள்ள துறைமுக பாலத்தில் மோதி சிதறின.

குளச்சலில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை. ஆனால், கட்டுமர மீனவர்கள் அதிகாலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு மதியம் கரை திரும்புவார்கள். நேற்று குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.


கடலுக்கு சென்ற ஒருசில மீனவர்களுக்கும் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. அவர்கள் பாதியில் கரை திரும்பினர். மீனவர்கள் தங்களின் கட்டுமரம், வள்ளங்களை மேடான பகுதிகளில் நிறுத்தி வைத்தனர். இதனால், மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு சந்தையில் மீன்வரத்து குறைந்தது.

இதுபோல், மண்டைக்காடு, சைமன்காலனி, கொட்டில்பாடு, வாணியக்குடி, கோடிமுனை, குறும்பனை போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது.

Next Story