லஞ்சம் வாங்கிய கருவூலத்துறை கண்காணிப்பாளர் கைது


லஞ்சம் வாங்கிய கருவூலத்துறை கண்காணிப்பாளர் கைது
x
தினத்தந்தி 27 July 2018 3:00 AM IST (Updated: 26 July 2018 11:05 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கருவூலத்துறை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்,


திண்டுக்கல் என்.எஸ். நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). இவர், திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். செல்வராஜுக்கு 4 மாத சம்பளம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் ரூ.10 லட்சத்து 78 ஆயிரம் வர வேண்டி இருந்தது.

இதனை பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்ட கருவூல கணக்குத்துறை அலுவலகத்தை அவர் அணுகினார். அப்போது, அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்திரன் (40) என்பவர் பணப்பலன்களை உடனடியாக பெற வேண்டுமானால் ரூ.8 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராஜ், அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியே வந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலனிடம் செல்போன்மூலம் அவர் புகார் அளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் கொடுத்து லஞ்சமாக வழங்குமாறு கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்படி, செல்வராஜ் கண்காணிப்பாளர் அறைக்கு சென்று சந்திரனிடம் ரூ.8 ஆயிரத்தை வழங்கினார்.

அப்போது, அங்கு சாதாரண உடையில் பதுங்கி இருந்த போலீசார் சந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் ரூபா கீதாராணி, கீதா உள்ளிட்ட போலீசார் கருவூலத்துறை அலுவலகத்துக்கு விரைந்தனர். பின்னர், சந்திரன் வேறு யாரிடமும் லஞ்சம் பெற்றிருக்கிறாரா? என்பது குறித்து தொடர்ந்து 3 மணி நேரம் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சந்திரனை திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் நம்பி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கருவூலத்துறை கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story