பெரம்பலூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் வழங்க வேண்டும்


பெரம்பலூர் மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 27 July 2018 4:15 AM IST (Updated: 27 July 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாயி சங்கங்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில்,

மாநில அரசு 2017-18-ம் ஆண்டில் அறிவித்த கரும்பிற்கான பரிந்துரை விலையை கரும்பு விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு அந்த மாநில அரசின் பரிந்துரை விலை கொடுக்கப்படவில்லை. அதனை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு காப்பீட்டு தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்பதை தெளிவாக விவசாயிகளுக்கு வங்கி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு பாமாயில் மர சாகுபடியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெற வேண்டும். விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டைகளை அமைத்து தர வேண்டும் என்றார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாணிக்கம் பேசுகையில், மழை பெய்வதற்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றார்.

அகில இந்திய விவசாயி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்குவது போல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாய கடன் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் உள்ள விதைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மானிய விலையில் விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகளை வழங்க வேண்டும். மேலப்புலியூர் கிராமத்தில் உள்ள சின்ன ஏரியில் பழுதடைந்துள்ள மதகுகளையும், ஏரி கரைகளையும் சீரமைக்க வேண்டும். விவசாயிகள் மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்வதில் தாமதம் ஆகுகிறது. மேலும் சரியான முகவரிக்கு மனுக்கள் பதிவு செய்யப்படுவதில்லை. விவசாயிகளுக்கு உடனடியாக விவசாய மின் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகளின் சங்கத்தின் மாநில நிர்வாகி ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், கரும்பிற்கான மத்திய அரசு பரிந்துரையை விலையை அறிவித்துள்ளது. இந்த விலை போதுமானதாக இல்லை. மாநில அரசும் கரும்பிற்கான பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும். விவசாயிகள் விவசாய டிராக்டருக்கு கடன் தவணை செலுத்தி கொண்டிருக்கும்போதே டிராக்டரை ஜப்தி செய்யும் தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இனாம்அகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன் பேசுகையில், தைக்காலுக்கும், அகரத்திற்கும் இடையே உள்ள கல்லாற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும். காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் அகரம், திருமாந்துறை பகுதிகளில் குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் கூட்டத்தை முடித்து கொண்டு கலெக்டர் சாந்தா மற்றும் அதிகாரிகள் புறப்பட தயாராகினர். இந்நிலையில் விவசாய சம்பந்தமாக கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் கூறாமல் சென்று விடுகின்றனர் என்று கூறி விவசாயிகள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட சென்றனர். பின்னர் கலெக்டர் சாந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்களது மனுக்களுக்கு பதில் கூறிவிட்டு தான் செல்வார்கள் என்று கூறியதை தொடர்ந்து விவசாயிகள் சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக கலெக்டர் சாந்தா பேசுகையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் தேவையான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டாரம், செட்டிகுளம் பகுதியில் உள்ள செட்டிகுளம் சின்ன வெங்காய வணிக வளாகத்தில் உணவு பதப்படுத்தும் துறையின் மூலமாக அதிகபடியான வருமானம் பெற ஆய்வு செய்வதற்கான மத்திய குழு வருகை புரிய இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தனியாக பணிமனை ஒன்றினை புதிதாக தொடங்க இருக்கிறது என்றார்.

கூட்டத்தில் சின்ன வெங்காயத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல் குறித்தும், அதிலிருந்து பயிர்களை காத்து மகசூலை அதிகரிப்பது குறித்தும் விவசாயிகளுக்கு விரிவான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மஞ்சள் பயிரினை குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெறுவது குறித்து குறும்படம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில் நுட்ப வல்லுனர் முனைவர் திவ்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வேளாண்மை இணை இயக்குனர் கனகசபை, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பெரியசாமி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story