போதைப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை
போதைப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவர்சோலையில் நடந்த விழிப்புணர்வு முகாமில் போலீஸ் அதிகாரி பேசினார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் போதை ஒழிப்பு பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கூடலூர் தாலுகா தேவர்சோலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போலீசார் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதற்கு மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி னார். சப்-இன்ஸ்பெக்டர் மணிதுரை, நக்சல் தடுப்பு பிரிவு ஏட்டு பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் பேசியபோது கூறியதாவது:-
இந்தியாவின் எதிர்காலமாக மாணவர்கள் திகழ்கின்றனர். நல்ல பழக்கங்கள் கொண்ட பண்பாளராக விளங்கினால் மட்டுமே அவர்களால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். குறிப்பாக போதைப்பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாக கூடாது. தற்போது கடைகளில் கிடைக்கும் ரசாயன பொருட்களை நுகர்ந்தவாறு மாணவர்கள் போதைக்கு ஆளாகின்றனர்.
கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த கூடாது. போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் மூளை திறன் பாதிக்கப்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கல்வி அறிவு பெற முடியாமல் நல்ல வேலையும் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் உங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் ஆன்ட்ராய்டு செல்போன்களை மாணவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை எடுத்து வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் பலர் செல்போன்களை எடுத்து வருகின்றனர். நல்ல விஷயங்களை விட தீய பழக்கங்களை தான் மாணவர்கள் அதிகளவில் செல்போன்களில் பார்க்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுக்கக்கூடாது.
போதைப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாரந்தோறும் பள்ளிக்கூட வளாகத்தில் அல்லது மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எனவே போதை பழக்கம் உள்ள மாணவர்கள் திருந்தி கொள்ள வேண்டும். போதைப்பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தால் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் ‘போதை இல்லாத சமுதாயத்தை படைப்போம்‘ என்று மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த முகாமில் ஆசிரியர்கள், போலீசார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் கூடலூர் நகர போக்குவரத்து போலீசார் சார்பில் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளியின் அரங்கில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி தலைமை தாங்கினார். சப்- இன்ஸ்பெக்டர் சத்தியன், தலைமை காவலர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
கோவை போக்குவரத்து போலீஸ் பயிற்சியாளர் விநாயகமூர்த்தி மாணவ- மாணவிகளுக்கு போதை குறித்த தீமைகள் மற்றும் சாலையில் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து விளக்கி பேசினார்.
Related Tags :
Next Story