கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு ரூ.4,700 கோடி வருமான வரி வசூல்


கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு ரூ.4,700 கோடி வருமான வரி வசூல்
x
தினத்தந்தி 27 July 2018 3:30 AM IST (Updated: 27 July 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு ரூ.4,700 கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தலைமை ஆணையர் டி.பி.கிருஷ்ணகுமார் கூறினார்.

கோவை,


வருமான வரி தினம் கோவை அவினாசி ரோட்டில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் கொண்டாடப்பட்டது. இதற்கு வருமான வரித்துறை தலைமை ஆணையர் டி.பி.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

1945-46-ம் ஆண்டுகளில் வருமான வரி ரூ.57 கோடி வசூலிக்கப்பட்டது. 1970-ம் ஆண்டில் ஆயிரம் கோடி ரூபாயும், 2000-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயும் வருமான வரி வசூலிக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டில் (2017-18) ரூ.10 லட்சம் கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டது. இவ்வாறு ஆண்டுதோறும் வருமான வரி வசூல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

கோவை மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2012-18 வரையிலான 6 ஆண்டுகளில் வருமான வரி வசூல் இருமடங்கு ஆகியுள்ளது. கடந்த ஆண்டு கோவை மண்டலத்தில் ரூ.4,700 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரியை கொண்டு மத்திய அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் வரை இருந்தால் வருமான வரி செலுத்த தேவை இல்லை. 80 வயதுக்கு மேல் உள்ளவராக இருந்தால் ரூ.5 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அரசு நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதற்கு குறிப்பிட்ட தொகைக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விவசாயத்துக்கும், அறக்கட்டளைக்கும் வரி வசூலிப்பது இல்லை. தமிழகம் அதிக வருமான வரி வசூல் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. வருமான வரியை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் மூலமாக இந்த தொகை நமது சமுதாயத்துக்கே திரும்ப வந்து சேருகிறது. மேலும் பட்டய கணக்காளர், வருமான வரி முனைவோர், வரிபடிவங்களை நிரப்பி தாக்கல் செய்ய உதவுகிற வரிப்படிவம் தயாரிப்போர் என பல நிலைகளில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கோவை வட்டார அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் வருமான வரித்துறை ஆணையர் பென்னிஜான், கூடுதல் வருமான வரித்துறை ஆணையர் சீனிவாசன், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் லட்சுமி நாராயணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story