லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம்
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கியிருப்பதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். மேலும் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ரெயில்களில் சரக்குகள் அனுப்புவது இருமடங்கு அதிகரித்துள்ளது.
கோவை,
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை இந்தியா முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது. கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பார்சல் நிறுவனங்கள் நடத்தும் லாரிகளும் இயக்கப்படவில்லை. ஆனால் ஆம்னி பஸ்களில் சிறிய அளவிலான சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
அரசு பஸ்களில் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் சரக்குகளை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் காய்கறிகளை இலவசமாக ஏற்றிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் வழக்கம் போல் செல்கின்றன.
கோவை கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர் உள்பட கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் லாரிகள் ஓடாததால் தொழிற்சாலைகளிலேயே அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. சரவணம்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கட்டுமான தொழிலுக்கு தேவையான இரும்பு தளவாடங்கள் மைசூர், கொச்சி ஆகிய நகரங்களுக்கு அனுப்ப முடியாமல் முடங்கி கிடக்கின்றன.
லாரிகள் வேலைநிறுத்தத்தினால் கோவையில் இருந்து ரெயில் மூலம் சரக்குகள் அனுப்புவது இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கோவை ரெயில் நிலையத்தில் சரக்குகள் குவிந்து கிடக்கின்றன. இதுகுறித்து கோவை ரெயில்நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் இருந்து வழக்கமாக தினமும் 40 முதல் 45 டன் சரக்குகள் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படும். ஆனால் லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு பிறகு ரெயில்கள் மூலம் சரக்குகள் அனுப்புவது கடந்த 7 நாட்களில் படிப்படியாக உயர்ந்து தற்போது இருமடங்கு அதிகரித்துள்ளது.
கோவை ரெயில் நிலையத்தில் இருந்து 90 டன் காய்கறிகள், ஆயத்த ஆடைகள், மோட்டார் பம்புகள், என்ஜினீயரிங் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கேரளா, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கோவையில் இருந்து டெல்லிக்கு இன்று(வெள்ளிக்கிழமை) சிறப்பு சரக்கு ரெயில் இயக்கப்படுகிறது. 18 வேகன்கள் கொண்ட இந்த ரெயிலில் 415 டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள அகில இந்திய ஏற்றுமதி சங்கத்தின் மண்டல தலைவர் சக்திவேல் மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறிஇருப்பதாவது:-
லாரிகளின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக தொழிற்சாலைகளின் நிலைமை மோசமாகி வருகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதிக்கு தயாராக உள்ள ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன.
கச்சா பொருட்கள் இல்லாததால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு அனுப்ப முடியாததால் பெரும்பாலான தொழிற்சாலைகள் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இதுபோன்று லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்றுமதி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி ஆர்டர் கொடுத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பொருட்கள் வந்து சேர ஒன்றிரண்டு நாட்கள் தாமதம் ஆனாலே ஆர்டரை ரத்து செய்து விடுகின்றன.
வங்காள தேசம், இலங்கை, வியட்னாம் ஆகிய நாடுகள் போட்டிப்போட்டுக் கொண்டு சரக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்புகின்றன. ஆனால் நம் நாட்டில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சரக்குகளை அனுப்பவில்லை என்றால் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்படும். லாரிகள் வேலைநிறுத்தம் எப்போது முடியும் என்று சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் காத்திருக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே லாரிகள் வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story