7 பேரை கொன்ற காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகள்


7 பேரை கொன்ற காட்டுயானையை பிடிக்க கும்கி யானைகள்
x
தினத்தந்தி 26 July 2018 10:00 PM GMT (Updated: 26 July 2018 7:44 PM GMT)

தேவாரம் பகுதியில் 7 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்க கும்கி யானைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வருகின்றன.

தேவாரம், 


தேவாரம் பகுதியில் உள்ள பெரும்பு வெட்டி, 18-ஆம் படி, தாலை ஊற்று உள்ளிட்ட இடங்களில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் என 7 பேரை அந்த யானை கொன்றது. விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

யானையின் வழித்தடத்தை அறிந்து, அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக, சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் பொள்ளாச்சியில் இருந்து வந்து தேவாரம் வனப்பகுதியில் முகாமிட்டனர். ஆனால் யானையை பிடிக்க அனுமதி கிடைக்காததால் வேட்டை தடுப்பு காவலர்கள் திரும்பி சென்றனர். இதற்கிடையே காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

காட்டு யானையால் மீண்டும் உயிர் பலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வனத்துறை உயர் அதிகாரிகளுடன் கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து கும்கி யானைகளின் உதவியோடு, காட்டு யானையை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி மாநில வன உயிரன பாதுகாப்பு துறையினர் நேற்று காட்டுயானையை பிடிக்க அனுமதி வழங்கினர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று பொள்ளாச்சி சென்றனர். பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற வனக்குழுவினர் இன்று (வெள்ளிக் கிழமை) தேவாரத்துக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அவர்கள் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

இதுகுறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறும்போது, தேவாரம் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள காட்டு யானையை பிடிப்பதற்கு பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து 2 கும்கி யானைகள் நாளை (இன்று) வருகின்றன. அந்த யானைகளுடன் 60 வன ஊழியர்கள், 5 கால்நடை டாக்டர் கள் வருகிறார்கள். 3 பொக்லைன் எந்திரங்கள், 2 லாரிகள் ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. யானையை மயக்க ஊசிபோட்டு பிடித்து முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

Next Story