2 அரசு விரைவு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
விழுப்புரம் அருகே 2 அரசு விரைவு பஸ்கள் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளவனூர்,
கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாலத்துறை பகுதியை சேர்ந்த பாலசந்தர் (வயது 54) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் நள்ளிரவு 12 மணியளவில் விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே ஏ.கே.குச்சிப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது யாரோ மர்ம நபர்கள், அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் அந்த பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.இதேபோல் இந்த பஸ்சிற்கு பின்னால் வந்து கொண்டிருந்த பட்டுக்கோட்டை- திருப்பதி செல்லும் மற்றொரு அரசு விரைவு பஸ்சின் மீதும் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதையடுத்து மாற்று பஸ்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பஸ்கள் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, கண்ணாடி உடைந்த 2 அரசு விரைவு பஸ்களும் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வளவனூர் போலீசில் பஸ் டிரைவர்கள் தனித்தனியாக புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story