பராமரிப்பு இன்றி கிடக்கும் காயிதே மில்லத் பூங்காவை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும்


பராமரிப்பு இன்றி கிடக்கும் காயிதே மில்லத் பூங்காவை சீரமைத்து மீண்டும் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 27 July 2018 3:00 AM IST (Updated: 27 July 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை புளியந்தோப்பில் பராமரிப்பு இன்றி கிடக்கும் காயிதே மில்லத் பூங்காவை சீரமைத்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு நாச்சியம்மாள் தெரு, மன்னார்சாமி தெரு சந்திப்பில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான காயிதே மில்லத் பூங்கா உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவுக்கு சென்று அங்குள்ள இருக்கையில் அமர்ந்து, மரத்தின் நிழலில் பொழுதை கழித்து வந்தனர்.

காலை, மாலை நேரங்களில் அந்த பகுதி முதியவர்கள் இந்த பூங்காவில்தான் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர். அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருந்த இந்த பூங்கா, கடந்த சில மாதங்களாக என்ன காரணத்தினாலோ திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால் பராமரிப்பு இல்லாமல் நடைபாதை, இருக்கைகள் என பூங்கா முழுவதும் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது. பூங்காவில் உள்ள காயிதே மில்லத் உருவ படத்துடன் கூடிய கல்வெட்டும் காகங்கள் எச்சம் போட்டு அவரது உருவமே தெரியாமல் பரிதாப நிலையில் உள்ளது.

இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, “நன்றாக உள்ள இந்த பூங்காவை எதற்காக பூட்டி வைத்தார்கள்? என்பது தெரியவில்லை. பல மாதங்களாக பூங்கா பூட்டியே கிடப்பதால் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடும். பூங்கா மூடப் பட்டதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதியில் முதியவர்களால் நடை பயிற்சி செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே காயிதே மில்லத் பூங்காவை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story