ராமநாதபுரம் அருகே, நிலத்தில் திடீர் விரிசல் ஏன்? வறட்சியால் ஏற்பட்டதாக அதிகாரி தகவல்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நிலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரி நீர் தன்மை இல்லாமல் விரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது கோரைக்கூட்டம் ஊராட்சி. இந்த பகுதியில் இந்திய இயற்கை எண்ணெய் எரிவாயு கழகத்தினர் எரிவாயு கிணறுகள் அமைத்து எரிவாயு எடுத்து வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 22 கிணறுகள் அமைத்து இதுபோன்று எரிவாயு எடுத்து மொத்தமாக சேகரித்து மின் உற்பத்திக்காக கொண்டு சென்று வருகின்றனர்.
இந்த பகுதிக்கு உட்பட்ட வலையனேந்தல் கிராமத்தில் காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருந்து வரும் கருப்பையா மனைவி காமாட்சி என்பவர் அந்த பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் கால் வைத்த இடத்தில் நிலத்தில் திடீரென மணல் சரிவு ஏற்பட்டுள்ளது. காமாட்சி அந்த பகுதியை உற்றுப்பார்த்தபோது நிலத்தில் விரிசல் ஏற்பட்டு அதனுள் மணல் உள்ளே சென்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுற்றுமுற்றும் பார்த்தபோது நீண்ட தூரத்திற்கு இந்த விரிசல் ஏற்பட்டிருந்ததும் மணல் உள்சென்றபடி இருந்ததும் தெரிந்தது.
இதனை தொடர்ந்து காமாட்சி அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது அங்கும் இங்குமாக இடைவெளி விட்டபடி விரிசல் நீண்ட தூரத்திற்கு ஏற்பட்டிருப்பதும், அதனுள் ஒரு மீட்டர் ஆழத்திற்கு சிறிது சிறிதாக மணல் உள்ளே சென்று கொண்டிருப்பதும் தெரிந்தது. இதனால் அந்த பகுதியில் குடியிருந்தவர்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் காமாட்சியின் வீட்டிற்குள்ளும் இந்த விரிசல் ஏற்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீசார் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கீழக்கரை தாசில்தார் ராஜேசுவரி தலைமையில் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து விசாரித்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் உதவி நிலஅமைப்பியல் அலுவலர் சுகதா ரஹீமா தலைமையிலான குழுவினர் அங்கு சென்று நிலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் அதன் ஆழம், நீளம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து குறிப்பெடுத்தனர். அந்த பகுதி மக்களிடம் விரிசல் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்பு உதவி நிலஅமைப்பியல் அலுவலர் சுகதா ரஹீமா கூறியதாவது:-
இந்த பகுதியில் நிலத்திற்கு அடியில் களிமண் தரை என்பதால் வறட்சி காலங்களில் நீர் தன்மை இல்லாமல் வறண்டு விரிசல் ஏற்படுவது இயற்கை. இதுபோன்ற காரணங்களினால் தான் நிலத்தின் மேல்பகுதியில் விரிசல் தெரிந்து மணல் உள்ளே சென்றுள்ளது.
அந்த சமயத்தில் நிலத்தில் அதிர்வோ வெப்பமான புகை வெளியாகுதல் போன்ற வேறு எந்த பாதிப்போ ஏற்படவில்லை. மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் இடைவெளிவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக விரிசல் ஏற்பட்டுள்ளதால் இது சாதாரணமான ஒன்றுதான். இதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இப்பகுதியில் இயற்கை எரிவாயு கழகத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு துளைபோட்டு எரிவாயு எடுத்து தற்போது வினியோகம் மட்டுமே செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில் நிலத்தில் எந்த துளைபோடும் பணியும் நடைபெறவில்லை. இதனால் இந்த விரிசலுக்கும் அந்த எரிவாயு கழக கிணறுக்கும் சம்பந்தம் இல்லை.
இருப்பினும் மக்கள் அச்சப்படுவதால் அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் இந்த பகுதியில் உள்ளவர்களை வேறுஇடத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட காமாட்சி கூறும்போது, காலையில் எழுந்து வெளியே சென்றபோது திடீரென விரிசல் ஏற்பட்டு மணல் உள்ளே சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். இந்த பகுதியில் அதிக அளவில் எரிவாயு எடுத்து வருவதால் பூமிக்கடியில் வெற்றிடம் ஏற்பட்டு அதன்காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறோம். எங்களின் அச்சத்தை போக்க உரிய ஆய்வு செய்து பாதிப்பு ஏற்படாமல் காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நிலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பதற்றம் அடைந்து காணப்படும் அப்பகுதி மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து குடும்பத்துடன் வெளியேறி ஆடுமாடுகளுடன் ஊருக்கு வெளியே மரத்தடியில் ஒன்று சேர்ந்து மிரட்சியுடன் தங்கினர். என்னதான் அதிகாரிகள் ஒன்றுமில்லை சாதாரண வெடிப்புதான் என்று கூறினாலும் குழந்தைகளை வைத்துள்ள அங்கு வசிப்பவர்களுக்கு அச்ச உணர்வு என்பது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. இதையடுத்து அங்கிருந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக திருப்புல்லாணி வட்டார வள மைய கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story