குமரி மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர்களுக்கு புதிய “ஸ்மார்ட் கார்டு” வினியோகம்


குமரி மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர்களுக்கு புதிய “ஸ்மார்ட் கார்டு” வினியோகம்
x
தினத்தந்தி 27 July 2018 4:15 AM IST (Updated: 27 July 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர்களுக்கு புதிய “ஸ்மார்ட் கார்டு“ வினியோகம் செய்யப்படுகிறது. விரைவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் திட்டமும் அமலுக்கு வருகிறது.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் சமையல் கியாஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தங்களது கியாஸ் மானியத்தை விட்டுக் கொடுத்தனர். பின்னர் கியாஸ் இணைப்பு இல்லாத ஏழை மக்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்புகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கியாஸ் நுகர்வோர்களுக்கு மாதந்தோறும் சிலிண்டர் வழங்கப்பட்டதும் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட கியாஸ் ஏஜென்சியால் வழங்கப்பட்டிருக்கும் நுகர்வோர் புத்தகத்தில் ‘கியாஸ் டெலிவரி‘ செய்யப்பட்டதை வரவு வைப்பது வழக்கம். இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது, கியாஸ் நுகர்வோருக்கு “ஸ்மார்ட் கார்டு“ வடிவில் நுகர்வோர் அட்டைகள் வழங்கும் திட்டத்தை தற்போது எண்ணெய் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அதன்படி குமரி மாவட்டத்தில் இன்டேன், பாரத், எச்.பி. போன்ற கியாஸ் நிறுவனங்கள் ஏஜென்சிதாரர்கள் மூலம் லட்சக்கணக்கான நுகர்வோர்களுக்கு கியாஸ் சப்ளை செய்து வருகின்றன. எச்.பி. கியாஸ் நிறுவனத்துக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கியாஸ் நுகர்வோர்கள் உள்ளனர். அவர்களுக்கு எச்.பி. நிறுவனம் சார்பில் முதல்முறையாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எச்.பி. கியாஸ் ஏஜென்சி நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் கியாஸ் சிலிண்டர் வினியோக ஊழியர்கள் மூலமாக இந்த கார்டுகளை வழங்கி வருகிறார்கள்.

நாகர்கோவில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள எச்.பி. கியாஸ் நுகர்வோர்களுக்கும், இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக ஒவ்வொரு நுகர்வோரிடம் இருந்தும் இந்த ஸ்மார்ட் கார்டுக்காக ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இனிமேல் கியாஸ் சிலிண்டர் வரவு வைக்கும் புத்தகம் தேவையில்லை என்றும், இந்த ஸ்மார்ட் கார்டுகள் வைத்திருந்தால் தான் இனிமேல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்படும் என்று எச்.பி. கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்கள் நுகர்வோரிடம் கூறிச்செல்கிறார்கள். முதற்கட்டமாக எச்.பி. கியாஸ் சிலிண்டருக்கு மட்டும் ஸ்மார்ட் கார்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிறகு படிப்படியாக அனைத்து கியாஸ் சிலிண்டர்களுக்கும் கொண்டு வரப்படுகிறது.

இதுதொடர்பாக நாகர்கோவில் எச்.பி. கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ரவீந்திரன் கூறியதாவது:-

எச்.பி. கியாஸ் நுகர்வோர்கள் அனைவருக்கும் தற்போது “ஈஸி கியாஸ் கார்டு“ என்ற பெயரில் ஸ்மார்ட் கார்டுகள் வினியோகம் செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்கள் நுகர்வோருக்கு சிலிண்டரை வினியோகம் செய்ததும், அவர்களது புத்தகத்தில் வரவு வைப்பார்கள். இனிமேல் அந்த புத்தகம் தேவையில்லை. சிலிண்டரை சப்ளை செய்ததும் சம்பந்தப்பட்ட நுகர்வோரின் ஸ்மார்ட் கார்டில் உள்ள ரகசியகுறியீட்டை எங்களது ஊழியர் ஸ்கேன் செய்வார். உடனே நுகர்வோர் கணக்கில் சிலிண்டர் வரவாகிவிடும். மேலும் இனிமேல் சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியர்கள் ஒரு நுகர்வோருக்கு உரிய சிலிண்டரை வேறு நபருக்கு வழங்குவதும் இதன் மூலம் தடுக்கப்படும்.

தற்போது கியாஸ் சிலிண்டருக்கு உரிய தொகையை எங்களது ஊழியர்கள் பணமாக பெற்று வருகிறார்கள். விரைவில் இந்த கார்டு மூலம் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் திட்டமும் அமலுக்கு வர இருக்கிறது. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவதற்காகத்தான் இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு சிலிண்டர் சப்ளை செய்ததும் ஆன்லைன் மூலம் (“டிஜிட்டல் பேமண்ட்“) பணம் செலுத்த விரும்புபவர்கள் எங்களது ஊழியர்களின் செல்போன் மூலமாக செலுத்தலாம். சிலிண்டர் சப்ளை செய்வதற்கு முன்பாகவே ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறை ஏற்கனவே இருந்து வருகிறது. அப்படி செலுத்தியவர்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தியதை குறிப்பிடும் வகையில் சீல் வைக்கப்பட்டு ரசீது வழங்கப்படும்.

இவ்வாறு ரவீந்திரன் கூறினார். 

Next Story