சட்டம்-ஒழுங்கு பணிகளை துரிதப்படுத்த வாட்ஸ்-அப் குரூப்
போக்குவரத்து, நெடுஞ்சாலை, காவல் துறை என அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து சட்டம்-ஒழுங்கு பணிகளை துரிதப்படுத்தும் வகையில் வாட்ஸ்-அப் குரூப் தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் லதா பேசியதாவது:-
குழப்பங்கள் ஏற்படுத்தும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் வட்டாட்சியர்களும் தங்கள் கவனத்திற்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுவாக அமைதியாக இருந்து வரும் பொதுமக்களிடம் சில நபர்கள் வீண் வதந்தியான தகவல்களை தெரிவித்து சட்டம்-ஒழுங்கை கெடுத்திடும் விதமாக செயல்படுவார்கள். அதை முழுமையாக கண்காணிக்க வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஊரக சாலைகளில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது கண்டறியப்பட்டால் அந்த இடங்களை தொடர்புடைய அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்வதுடன், அவ்வப்போது காவல்துறையினரின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நான்கு வழிச்சாலைகளில் பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சாலைகளில் இருபக்கங்களில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குரிய பணிகளுக்கு காவல்துறையுடன், வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சாலைகளில் விபத்து ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அமைக்கப்பட்ட குழு உடனடியாக சென்று விபத்து காரணம் குறித்து அறிக்கை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் தொடர்ந்து விபத்துகள் ஏற்படாத வகையில் தக்க மேல்நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். தற்போது அதற்காக புதிய வாட்ஸ்-அப் குரூப் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து இப்பணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து துறையினர், சாலைகளில் அதிவேகத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் உடனடியாக உரிமத்தை ரத்து செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் தேவகோட்டை சப்-கலெக்டர் ஆஷா அஜீத் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story