குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே வக்காரமாரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றி தினமும் காலை மற்றும் இரவில் கிராம மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு மின் மோட்டார் திடீரென பழுதானது. இதனால் அந்த கிராமத்தில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மின்மோட்டாரை சீரமைத்து, குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி நிர்வாகம், குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கடந்த 1½ ஆண்டுகளாக அருகில் உள்ள நாஞ்சலூர், சிவாயம், செட்டிமேடு ஆகிய கிராமங்களுக்கு சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் கிராம மக்கள் சென்று குடங்களில் குடிநீர் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வக்காரமாரி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு நின்றன.
இதற்கிடையில் அந்த வழியாக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் காரில் வந்தார். கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டது பற்றி அறிந்ததும், அவர் காரை விட்டு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அவர் உடனடியாக குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், புதிய மின் மோட்டார் அமைத்து கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் பாண்டியன் எம்.எல்.ஏ. கிராம மக்களிடம், 10 நாட்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story