ஆம்பூர் அருகே மலைப்பாதையில் டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் பலி


ஆம்பூர் அருகே மலைப்பாதையில் டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் பலி
x
தினத்தந்தி 27 July 2018 5:28 AM IST (Updated: 27 July 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே மலைப்பாதையில் டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள். மலைக்கிராமங்களுக்கு பஸ்வசதி இல்லாததால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

ஆம்பூர்,

மலைப்பாதையில் டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் பலியான விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி மலையில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு போதுமான பஸ் வசதி கிடையாது. ஒரே ஒரு மினிபஸ் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் சென்று வருகிறது. இதனால் மலைப்பகுதிக்கு செல்லும் மக்கள் பஸ் வசதி இல்லாத காரணத்தால் அந்த பகுதிக்கு எந்த வாகனங்கள் சென்றாலும் அதில் ‘லிப்ட்’ கேட்டு ஏறி செல்வது வாடிக்கை ஆகும்.

இந்தநிலையில் நேற்று மதியம் ஆம்பூரில் இருந்து ஒரு டிராக்டர் ஹாலோபிளாக் கல் மற்றும் சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு நாயக்கனேரி மலை கிராமத்திற்கு சென்றது. டிராக்டரை உமாபதி என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது நாயக்கனேரி மலைக்கிராமத்தை சேர்ந்த 4 பேர் அந்த டிராக்டரில் ஏறி, ஹாலோ பிளாக் கல் மீது அமர்ந்து சென்றனர். டிராக்டர் மலைப்பாதையில் மேடான ஒரு வளைவில் திரும்பும் போது பாரம் தாங்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி வந்தது. அப்போது திடீர் என்று டிராக்டர் என்ஜின் மேல்நோக்கி தூக்கியபடி கவிழ்ந்தது.

அப்போது ஹாலோபிளாக் கற்கள் டிராக்டரில் இருந்து சரியத்தொடங்கியது. இதில் அதன்மீது அமர்ந்திருந்த 4 பேரும் கீழே விழுந்து டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களை மீட்கமுடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த மலைக்கிராம மக்கள் கடப்பாரையை எடுத்து வந்து டிராக்டரை நிமிர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் டிராக்டரில் அமர்ந்து வந்த நாயக்கனேரிமலை கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது 61), சிங்காரம் (63) ஆகிய 2 பேரும் ஹாலோபிளாக் கற்களுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். சின்னசாமி (65), பட்டு, டிரைவர் உமாபாதி ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து, விபத்தில் பலியான பொன்னுசாமி, சிங்காரம் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைகக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த சிங்காரம், பொன்னுசாமி ஆகிய இருவரும் நாயக்கனேரிக்கு செல்வதற்காக டிராக்டரில் ‘லிப்ட்’ கேட்டு சென்றது தெரியவந்தது.

மேலும் நாயக்கனேரிக்கு செல்லும் மலைப்பாதை மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதனை சீரமைத்து அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story