ஏலம் விடப்படும் வீடுகள்
வீட்டை வங்கிகள் ஏலம் விட்டால், அதை ஏலத்தில் எடுக்க யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
வங்கிகளில் கடன் வாங்கி வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக கூறுகின்றன, புள்ளி விவரங்கள். அப்படி திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் வீடுகளை வங்கிகள் திருப்பி எடுத்துக்கொண்டு ஏலம் விட்டு தங்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை வசூலித்துக் கொள்கின்றன. ஆனால், விஷயம் அதுவல்ல. வங்கிகள் திருப்பி எடுத்துக் கொண்டு ஏலம் விடும் வீடுகளை வாங்கலாமா? இதில் உள்ள நன்மை, தீமைகள் என்னென்ன?
வீடு ஏலத்திற்கு வரும் போது வங்கி சட்ட வல்லுநர்கள் துருவித் துருவி விசாரிப்பார்கள். பத்திரங்களை ஆய்வு செய்வார்கள். பத்திரங்களில் எந்தவிதக் குறைபாடோ, வில்லங்கமோ இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வீடு ஏலத்திற்கு கொண்டு வரப்படும். எனவே வங்கி விடும் ஏலம் மூலம் பெறும் வீட்டை வாங்குவதில் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் எழாது. வீட்டை பொது ஏலத்திற்கு வங்கியிடம் இருந்து எடுப்பதால் விலை நியாயமாக இருக்கும். வியாபார நோக்கம், லாப நோக்கம் ஆகியவற்றை வங்கிகள் பார்ப்பதில்லை. வீடு ஏல விற்பனை விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இதேபோல ஏல விற்பனை சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்கும்.
ஏலத்தில் வாங்கிய வீட்டில் அதன் உரிமையாளரே குடி இருந்தால், அவர் உடனே வீட்டை காலி செய்து விடுவார். ஒரு வேளை மாத வாடகைக்கோ, குத்தகைக்கோ வீட்டை விட்டிருந்தால், அதில் குடியிருப்பவர்கள் அந்த ஒப்பந்தத்தைக் காட்டி வீட்டை உடனே காலி செய்ய மறுக்கலாம். ஒருவேளை தீர்க்கமாக மறுத்து விட்டால், ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை அவர்கள் குடியிருக்கலாம்.
வீட்டை வங்கிகள் ஏலம் விட்டால், அதை ஏலத்தில் எடுக்க யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பிறகு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் எஞ்சிய பணத்தைக் கட்டி விட வேண்டும். காலக் கெடுவுக்குள் பணம் செலுத்தாமல் போனாலோ, பணம் இல்லை என்று கைவிரித்தாலோ தானாகவே ஏலத்தில் எடுத்த வீடு ரத்தாகிவிடும். பிறகு மீண்டும் ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ளும் தரகர்கள் ஒன்றுகூடி ஏற்கனவே பேசி வைத்து ஏலத் தொகையை கூட்டவோ, குறைக்கவோ செய்து விடுவார்கள். ஏலத்தை தாறுமாறாக ஏற்றிவிட்டுக் கடைசியில் யார் தலையிலாவது கட்டி விடவும் வாய்ப்புகள் அதிகம். யாராவது ஏல விலையை தாறுமாறாக உயர்த்தினால் உன்னிப்பாகக் கவனித்து செயல்பட வேண்டும். அவ்வளவுதான் இவற்றை எச்சரிக்கையாக கவனித்தாலே போதும் ஏலம் விடும் வீடுகளை தாராளமாக வாங்கலாம்.
Related Tags :
Next Story