7-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு: செங்கோட்டையில் 2 லாரிகள் மீது கல்வீச்சு


7-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு: செங்கோட்டையில் 2 லாரிகள் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 27 July 2018 3:11 PM IST (Updated: 27 July 2018 3:11 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. செங்கோட்டையில் 2 லாரிகள் மீது மர்மநபர்கள் கற்களை வீசினார்கள்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. செங்கோட்டையில் 2 லாரிகள் மீது மர்மநபர்கள் கற்களை வீசினார்கள்.

லாரிகள் வேலை நிறுத்தம்

அகில இந்திய அளவில் டீசல் விலையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரவேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பழைய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் நெல்லை மாவட்டத்தில் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இதனால் பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. மினி லாரிகள், லோடு ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. ஒருசில பெரிய லாரிகளும் சரக்குகளை ஏற்றிச் சென்றன.

வாடகை அதிகம்

இதனால் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், ஓசூர் உள்ளிட்ட வெளியூரில் இருந்து லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. தற்போது வேலை நிறுத்த காலத்தில் இயக்கப்படும் லாரிகளுக்கு கூடுதல் வாடகை செலுத்தி காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மினி லாரிகளில் வழக்கம் போல் காய்கறிகள் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதேபோல் கேரளாவுக்கும் வழக்கம் போல் மினி லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. லாரி வாடகை உயர்வுடன் காய்கறி மூட்டைகளை ஏற்றி, இறக்கும் கூலியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் நயினார்குளம் மார்க்கெட்டுக்கு வழக்கம் போல் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

லாரிகள் மீது கல்வீச்சு

லாரி வேலை நிறுத்தம் நீடித்த போதிலும் நெல்லை மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களுக்கு தாராளமாக கிடைக்கிறது. அவற்றின் விலையும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று வியாபாரிகள் கூறினார்கள்.

இதற்கிடையே நெல்லையில் இருந்து கேரளாவுக்கு சென்ற 2 லாரிகள் மீது செங்கோட்டை அருகே கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 4 பேரை தேடி வருகின்றனர். கல்வீச்சில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

Next Story