மாஞ்சோலைக்கு செல்ல வாகன நுழைவு கட்டணம் இருமடங்கு உயர்வு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
அம்பை மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கு செல்ல வாகன நுழைவு கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
அம்பை,
அம்பை மாஞ்சோலை தேயிலை தோட்டத்துக்கு செல்ல வாகன நுழைவு கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மாஞ்சோலைநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் குற்றாலம் அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் புலிகள் காப்பகமும் உள்ளது. இங்குதான் மாஞ்சாலை தேயிலை தோட்டமும் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்கவும், அருவிகளில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் எப்போதும் வந்து செல்வார்கள். தற்போது அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தையும் ஏராளமானவர்கள் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
கட்டணம் உயர்வுமாஞ்சோலை பகுதியில் குதிரைவெட்டி, காக்காச்சி உள்ளிட்ட 5 தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்கள் பசுமை போர்த்தி மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. இதன் அழகை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள். இங்கு செல்ல வேண்டுமானால், அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மேலும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சுங்கச்சாவடியில் உரிய கட்டணத்தை செலுத்தி செல்ல வேண்டும்.
இதற்கு முன்பு மாஞ்சோலை செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, தற்போது ரூ.950 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும், மணிமுத்தாறு அருவியில் குளிக்க வசூலிக்கப்படும் கட்டணத்தில் மாற்றம் இல்லை. அங்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது.