லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்


லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 28 July 2018 4:00 AM IST (Updated: 27 July 2018 11:49 PM IST)
t-max-icont-min-icon

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக கன்டெய்னர் மற்றும் டிரைலர் லாரி சங்கத்தினரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திருவொற்றியூர்,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் 8–வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கன்டெய்னர் மற்றும் டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்றுமதி, இறக்குமதிக் காக சென்னை துறைமுகம் செல்லும் 2 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளன.

இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.500 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மாதவரம் மஞ்சம்பாக்கம் முதல் காசிமேடு ஜீரோ கேட் வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் சாலையோரம் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

பொன்னேரி, மீஞ்சூர், மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கன்டெய்னர் சோதனை மையத்தில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதிக்காக தினமும் சென்னை துறைமுகத்துக்கு 2 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களும், குளிரூட்டப்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு கப்பல்கள் மூலம் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் அந்த உணவு பொருட்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

‘‘ஏற்கனவே வாடகை உயர்வு குறித்து கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முழுஅளவு ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்படுவதால் அன்று மாலையே சமரசம் என்ற பெயரில் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருகிறார்களே தவிர, இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. ஆகையால் 8–வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அனைத்து லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வேலைநிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.மனோகரன் கூறியதாவது:–

சென்னை துறைமுகங்களில் 6 ஆயிரம் லாரிகள் உள்பட தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரெய்லர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்ட சரக்குகளை கையாளும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது.

புதிதாக கொண்டு வரப்படும் சரக்குகளை எடுப்பது இல்லை. இதன் மூலம் மத்திய அரசுக்கு அதிக இழப்பு ஏற்படும். எனவே மத்திய அரசு உடனடியாக அழைத்து சுமூக தீர்வு காணும் என்று எதிர்பார்க்கிறோம்.

பெட்ரோல்–டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு தடையாக இருப்பது கண்டனத்துக்குரியது.  இவ்வாறு அவர் கூறினார்.

லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தாலும், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. எனவே மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரெயில் மறியல் போராட்டத்தில் குதிக்க லாரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாதவரத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று(சனிக்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

Next Story