திருவேற்காட்டில் கடைகள் அடைப்பு பூ மாலைகள் வாங்க முடியாமல் பக்தர்கள் அவதி


திருவேற்காட்டில் கடைகள் அடைப்பு பூ மாலைகள் வாங்க முடியாமல் பக்தர்கள் அவதி
x
தினத்தந்தி 27 July 2018 10:30 PM GMT (Updated: 27 July 2018 7:00 PM GMT)

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நேற்று கடை அடைப்பில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் பூ மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோவில் அருகே சன்னதி தெரு மற்றும் கோவில் எதிரே இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவேற்காட்டில் 3 நாட்கள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி நேற்று வியாபாரிகள் கடைஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவிலை சுற்றிலும் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

இதனால் ஆடி வெள்ளிக்கிழ மையான நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், அம்மனுக்கு அணிவிக்க பூ மாலை, எலுமிச்சை மாலை மற்றும் தேங்காய், பழம், கற்பூரம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர் இதனால் பக்தர்கள் வெறும் கையோடு சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் இடிக்கப்பட்ட கடைகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறும்போது, “இங்குள்ள கடைகள் அகற்றப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் அந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதையின் ஒரு சிறு பகுதியிலேயே மீண்டும் கடைகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட கடைகள் முன்பு கிடந்த கட்டிட கழிவுகளை நகராட்சி மற்றும் கோவில் ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

Next Story