மதிக்காமல் செயல்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்
ஐகோர்ட்டு மற்றும் அரசு வக்கீல் உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு, ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர் ஜி.ஜெயபிரகாஷ். அரசு ஊழியரான இவர், தனக்கு எதிராக மாவட்ட கலெக்டர் எடுத்துள்ள துறை ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை 8 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் ஏன் இழுத்தடிக்கப்படுகிறது? என்பதை விளக்கும் விதமாக அனைத்து ஆவணங்களுடன், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ.) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பூண்டி பி.டி.ஓ., எஸ்.ஜி.கிருஷ்ணன் ஆஜராகவில்லை. 11.15 மணிக்குத்தான் அவர் கோர்ட்டில் ஆஜரானார். என்றாலும், நீதிமன்ற உத்தரவின்படி எந்த ஒரு ஆவணங்களையும் அவர் எடுத்துவரவில்லை.
வழக்கு தொடர்பாக நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு, சரியான பதிலை தெரிவிக்கவும் அவரால் முடியவில்லை. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ரகு, அனைத்து ஆவணங்களுடன் ஆஜராகும்படி பி.டி.ஓ.வுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியதாக கூறினார்.
இதையடுத்து பி.டி.ஓ., கிருஷ்ணனின் செயலுக்கு, நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பி.டி.ஓ., கிருஷ்ணனின் செயலை தீவிரமாக கருதவேண்டியதுள்ளது. இந்த அதிகாரிக்கு, நீதி பரிபாலனத்தின் தீவிரத்தன்மை தெரியவில்லை. அவர் கடமை தவறியது மட்டுமல்லாமல், ஆவணங்களையும் கொண்டுவரவில்லை. இந்த வழக்கில், அரசு தரப்பின் நியாயத்தை அரசு வக்கீலிடம் எடுத்துரைக்கவும் இல்லை. அவர் வேண்டுமென்ற தன்னுடைய கடமையை செய்ய தவறியதுடன், இந்த ஐகோர்ட்டு மற்றும் அரசு வக்கீல் உத்தரவை மதிக்கவில்லை.
எனவே, அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடுகிறேன். மேலும், இந்த வழக்கிற்கு தேவையான ஆவணங்கள், விவரங்களுடன் ஆஜராக, ஒரு பொறுப்புள்ள அதிகாரியை கலெக்டர் நியமிக்க வேண்டும். இந்த வழக்கை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story