ஆசிரியை சாவுக்கு காரணமான கணவர் கைது; நண்பர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


ஆசிரியை சாவுக்கு காரணமான கணவர் கைது; நண்பர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 July 2018 3:15 AM IST (Updated: 28 July 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தை பார்த்து வீட்டில் வைத்து சுகப்பிரசவத்திற்கு முயன்றதில் ஆசிரியை இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியையின் கணவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய நண்பரையும், அவரது மனைவியையும் தேடிவருகின்றனர்.

திருப்பூர், 


திருப்பூரில் உள்ள காங்கேயம் ரோடு புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா (28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு டிமானி (3) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கிருத்திகா, 2-வது முறையாக கர்ப்பமானார்.

அந்த குழந்தையை இயற்கை முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்ற ஆசையில் கிருத்திகாவும், கார்த்திகேயனும் யூடியூப் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்துகொண்டு அதன்படி நடந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22-ந் தேதி காலை 11 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீனுக்கு தெரிவித்துள்ளார். உடனே பிரவீன் தனது மனைவி லாவண்யாவுடன் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். பின்னர் யூடியூப்பில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கார்த்திகேயன், பிரவீன், லாவண்யா ஆகியோர் இயற்கை முறையில் கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனைத்தொடர்ந்து கிருத்திகாவுக்கு அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதனால் ஒரு கட்டத்தில் கிருத்திகா மயக்கம் அடைந்தார். உடனே கிருத்திகாவை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து திருப்பூர் ஊரக போலீசார், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் கிருத்திகாவின் உடல் அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் பிரேதபரிசோதனை சான்றிதழ் இருந்தால்தான் மின்மயானத்தில் உடலை எரிக்க முடியும் என்பதால் கிருத்திகாவின் உடலை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போலீசாரின் ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து கிருத்திகாவின் தந்தை சுப்பிரமணி, தனது மகள் சாவில் சந்தேகம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து, திருப்பூர் ஊரக போலீசார், 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் டாக்டர்கள், கிருத்திகாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி திருப்பூர் ஊரக போலீசில் புகார் செய்தார். அதில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில் கிருத்திகா இறந்துள்ளார். எனவே, அவரது சாவுக்கு காரணமான கணவர் கார்த்திகேயன், அவருடைய நண்பர் பிரவீன், லாவண்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கிருத்திகாவின் மரணம் குறித்து 174 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை நேற்று மாற்றினர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 304 ஏ பிரிவின் கீழ் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையாக இருந்து மரணம் நேரிட காரணமாக இருந்ததாக ஆசிரியையின் கணவர் கார்த்திகேயன், அவரது நண்பர் பிரவீன், நண்பரின் மனைவி லாவண்யா ஆகியோர் மீது திருப்பூர் ஊரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்தார்.

இந்தநிலையில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்து திருப்பூர் ஜே.எம்.4 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு நித்தியகலா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதனைத்தொடர்ந்து கார்த்திகேயனை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி கார்த்திகேயனை திருப்பூர் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். 

Next Story