பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்
பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையர் பி.அமுதா வலியுறுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடை செய்தல் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும், உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் பி.அமுதா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு ஆணையர் அமுதா பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிளாஸ்டிக்கை தடை செய்தல் குறித்து சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்யும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள், நுகர்வோர்கள், உணவு விடுதிகளில் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
நாள்தோறும் நாம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்லும் பொழுது துணிப்பைகளை கொண்டு செல்ல வேண்டும். தற்காலத்தில் பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்துவதால் எண்ணற்ற பாதிப்புகள் இருக்கிறது. அனைத்து பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக அரசு 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்து அறிவித்துள்ளது. எனவே நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து முழுமையாக மாற வேண்டும். பிளாஸ்டிக் அல்லாத பொருட்களை பயன்படுத்த அனைவரும் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், மகளிர் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், மாவட்ட வன அலுவலர் பிரித்தா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், சிறு வியாபாரிகள் சங்கம், நுகர்வோர் சங்கம், சிறு, குறு தொழில் நிறுவன பிரதிநிதிகள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story