டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 27 July 2018 10:00 PM GMT (Updated: 27 July 2018 7:55 PM GMT)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, பொதுமக்களின் தீவிர போராட்டத்தினால் அகற்றப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

இந்நிலையில் பக்கத்து கிராமமான கோடாலியில் உள்ள டாஸ்மாக் கடை ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், வியாபாரம் குறைவாக நடப்பதாலும் அந்த டாஸ்மாக் கடையை உதயநத்தம் கிராமத்திற்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்ததாக தகவல் பரவியது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடப்பதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநத்தம் பகுதி சுய உதவிக்குழு பெண்கள் உள்பட கிராம மக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், இப்பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம் என்றனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால், தா.பழூர் வருவாய் ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கிராம மக்கள் முன்னிலையில் கலால் தாசில்தார் திருமாறனிடம் போனில் பேசினர். அப்போது அவர், அங்கு டாஸ்மாக் கடை திறப்பதாக வதந்தி பரவியுள்ளதாகவும், அந்த பகுதிக்கு டாஸ்மாக் கடை வராது என்றும் கூறியதாக கிராம மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story