சின்னாளபட்டி அருகே சிறுமலை வனப்பகுதியில் தீ
சிறுமலை வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்றனர். அந்த பகுதியில் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சின்னாளபட்டி,
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை வனப்பகுதி சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். இந்த மலைத்தொடர் நத்தத்தில் தொடங்கி சின்னாளபட்டி, கொடைரோடு வழியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வரை செல்கிறது. இங்குள்ள வனப்பகுதியில் காட்டெருமை, மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமலை வனத்தின் செழுமையை அதிகரிக்க ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் ஹெலிகாப்டரில் இருந்து அரியவகை மர விதைகள் தூவப்பட்டது. அந்த விதைகள் முளைத்து ஆங்காங்கே மரங்களாக காட்சி தருகிறது. இந்த அரியவகை மரங்களை மர்ம கும்பல் வெட்டி வருவது தொடர்கதையாக உள்ளது. பொதுமக்களின் உதவியுடன் வனத்துறையினர் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் முழுமையாக கட்டுப்படுத்துவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
மேலும் அந்த கும்பல் கோடைகாலத்தில் வனப்பகுதியில் தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். பின்னர் தீ அணைந்த பின்பு அரிய வகை மரங்கள் மட்டும் பாதி எரிந்த நிலையில் தனியாக நிற்கிறது. அதனை மர்மநபர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சின்னாளபட்டியை அடுத்த அமலிநகர் வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுவிட்டனர். தீ மளமளவென வேகமாக பரவியது. இந்த தீ நேற்று காலை வரை நீடித்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. வனத்துறையினர் போதுமான ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. மேலும் வனப்பகுதியில் தீப்பிடித்தாலும் அதுவாக எரிந்து அணைந்து போகிறதே தவிர, அவர்கள் வருவதே இல்லை. எனவே, வனத்துறையினர் வனப்பகுதியில் முகாமிட்டு, தீ வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story