முழு சந்திர கிரகணத்தை தொலைநோக்கி கருவி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டனர்


முழு சந்திர கிரகணத்தை தொலைநோக்கி கருவி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 28 July 2018 4:45 AM IST (Updated: 28 July 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அண்ணா கோளரங்கத்தில் முழு சந்திர கிரகணத்தை தொலைநோக்கி கருவி மூலம் பொதுமக்கள் ஆர்வ முடன் பார்வை யிட்டனர்.

திருச்சி,

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி நேர்க்கோட்டில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. புவியின் கூம்பு வடிவ முழுநிழல் பகுதியின் உட்புறம் சந்திரன் முழுமையாக நுழைந்து கடந்து சென்றால் அது முழு சந்திரகிரகணம் எனப்படுகிறது. அப்போது சந்திரனின் ஒளி வெகுவாக குறையும். புவியின் நிழல் பகுதியில் சந்திரன் இருந்தாலும் புவியின் வளி மண்டலத்தில் பட்டு சிதறடிக்கப்பட்ட பின், எஞ்சிய செந்நிற ஒளி சந்திரன் மீது படியும். எனவே சந்திரன் செந்நிறமாக தோற்றம் அளிக்கும்.

21-ம் நூற்றாண்டிலேயே மிக நீளமான முழு சந்திர கிரகணம் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நிகழ்ந்தது. இந்த அரிய வான் நிகழ்வு இந்திய நேரப்படி பகுதி கிரகணமாக நேற்று இரவு 11.54 மணிக்கு ஆரம்பமானது. முழுகிரகணம் அதிகாலை 1 மணிக்கு தொடங்கி, அதிகபட்ச கிரகணம் 1.52 மணிக்கு நிகழ்ந்தது. முழுகிரகணம் அதிகாலை 2.43 மணிக்கு முடிந்தது. பகுதி சந்திர கிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிந்தது. இதனை பொதுமக்கள் தொலைநோக்கி கருவி மூலம் பார்ப்பதற்காக திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கோளரங்க வளாகத்தில் நேற்று இரவு தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டு இருந்தது. சந்திரகிரகணத்தை பார்க்க இரவு 7.30 மணி முதலே பொதுமக்கள் கோளரங்கத்துக்கு வர தொடங்கினர். பெற்றோர் சிலர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து இருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீண்டவரிசையில் நின்று தொலைநோக்கி கருவி மூலம் சந்திர கிரகணத்தை ஆர்வமுடன் பார்வையிட்டனர். பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு சந்திர கிரகணம் ஏற் படுவது எப்படி? என்பது பற்றி விளக்கி கூறினார்கள். சிலர் கோளரங்க பணியாளர்களிடம் இது பற்றி கேட்டு தெரிந்து கொண்டனர்.

இதேபோல் மற்றொரு அரிய வான் நிகழ்வான பூமிக்கு அருகில் செவ்வாய் வருவதையும் தொலைநோக்கி கருவி மூலம் பொதுமக்கள் பார்வையிட்டனர். பூமியில் இருந்து சுமார் 8.83 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கோளானது பூமிக்கு 5.69 கோடி கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அருகில் வருவதால் செவ்வாய் கோள் அளவில் சற்று பெரியதாகவும், பிரகாசமான செந்நிறமாகவும் காணப்படும். இந்த நிகழ்வை நேற்று இரவு 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இது குறித்து அண்ணா கோளரங்க திட்ட இயக்குனர்(பொறுப்பு) லெனின் தமிழ்க்கோவன் கூறுகையில், “முழு சந்திர கிரகண நிகழ்வை பொதுமக்கள் தொலைநோக்கி கருவி மூலம் பார்க்க கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் காணலாம். இதனால் தீங்கு விளையாது. இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அனைத்து பணியாளர்களும் கோளரங்கத்தில் பணியில் இருப்போம். பொதுமக்கள் எந்நேரம் வந்தாலும் தொலைநோக்கி கருவி மூலம் பார்க்கலாம். இந்தியாவில் தெரியக்கூடிய இதுபோன்ற ஒரு முழு சந்திரகிரகணம் மீண்டும் அடுத்த ஆண்டு(2019) ஜனவரி 21-ந் தேதி இரவில் நிகழும். இதேபோல் பூமிக்கு அருகில் செவ்வாய் வரும் நிகழ்வை பார்க்க வரும் 30, 31-ந் தேதிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

Next Story