அப்துல்கலாம் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - டி.டி.வி.தினகரன் பேட்டி


அப்துல்கலாம் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 28 July 2018 5:00 AM IST (Updated: 28 July 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

அப்துல்கலாம் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

ராமேசுவரம்,

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ராமேசுவரம் வந்தார்.

அவரை முன்னாள் நகரசபை தலைவர் அர்ச்சுனன், அவைத்தலைவர் பிச்சை, நகர் செயலாளர் பெருமாள், மாநில மீனவரணி துணை செயலாளர் கணேஷ்குமார், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அன்னகர்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் சுதாகர், மாவட்ட மீனவரணி செயலாளர் ஜோசப் பெர்னாண்டோ உள்பட கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் டி.டி.வி. தினகரன் ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரை கலாமின் அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பின்பு கலாமின் அண்ணனிடம் பழங்களை கொடுத்து அவரது காலில் வணங்கி டி.டி.வி.தினகரன் ஆசி பெற்றார். பின்னர் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.

அதன்பின்னர் கலாம் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட தினகரன் பின்பு வீட்டின் மாடியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவருக்கு கலாமின் உருவச்சிலையை அவரது அண்ணன் பரிசாக வழங்கினார்.

பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அப்துல்கலாம் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். ஆண்டுதோறும் அவருடைய நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த இங்கு வருவேன். கலாமின் நினைவகத்தில் அறிவியல் அருங்காட்சியகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் அதனை வலியுறுத்துவேன்.

கலாமின் எண்ணம் போல் கண்டிப்பாக இந்தியா வல்லரசு நாடாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பிறகு அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

Next Story