முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 3–வது ஆண்டு நினைவு தினம்: அமைச்சர், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3–வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருடைய நினைவிடத்தில் அமைச்சர்,முக்கிய பிரமுர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராமேசுவரம்,
முன்னாள் ஜனாபதி அப்துல் கலாமின் 3–வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை 8 மணி அளவில் பேய்க்கரும்பு கிராமத்தில் உள்ள அவருடைய நினைவிடத்துக்கு அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயர், இவரது மகள் நசீமா பீவி, மகன் ஜெய்னுலாபுதீன், பேரன்கள் சேக் தாவூது, சேக் சலீம், நிஜாமுதீன், ஜமாத் தலைவர் அப்துல் ஹமீது, ஆலிம்சா அப்துல் ரகுமான் மற்றும் குடும்பத்தினர் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் பிஸ்கட், சாக்லெட் போன்றவை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், அ.தி.மு.க. அவை தலைவர் செ.முருகேசன், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், ஆடிட்டர் லோகநாதன் ஆகியோர் மலர் வளையம் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மதியம் 12.30 மணிஅளவில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் வது.நடராஜன், கழக அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி, மருத்துவர் அணி செயலாளர் முத்தையா, மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், மண்டபம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், முன்னாள் நகரசபை தலைவர் அர்ச்சுனன், அவை தலைவர் பிச்சை, நகர் செயலாளர் பெருமாள், மாநில மீனவரணி துணை செயலாளர் கணேஷ்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் வந்து அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர்கள் குப்புராமு, சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், பவர் நாகேந்திரன், நகர் தலைவர் ஸ்ரீதர், மகளிரணி துர்கா ராஜேசுவரி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகவேல், திசைவீரன், நகர் செயலாளர் நாசர்கான், அவை தலைவர் சண்முகம், நிர்வாகி நாகசாமி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் காந்தகுமார் ஆகியோர் உள்பட தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் தாமு கலாம் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் நாகராஜ் வந்திருந்தார். கலாம் படித்த 1ம் எண் பள்ளியில் அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், அமைப்பினர் கலாம் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். திருப்பூரை சேர்ந்த வாலிபர் அய்யப்பன் தனது உடலில் 85 மரங்களின் விதைகளை ஒட்டிவைத்து மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல காரைக்குடி வாலிபர் ராஜேசுவரன் தனது உடலில் தேசியக்கொடி போல வரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஜூனியர் ரெட்கிராஸ் சார்பில் மண்டபம் கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி தலைமையில் பேரணி நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பாக தொடங்கிய இந்த பேரணியை தாசில்தார் சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோடி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கன்வீனர்கள் ரமேஷ், பாலமுருகன், ஜீவா ஆகியோர் தலைமையில் 600 மாணவர்களும், 25 ஆசிரியர்களும் பேரணியாக சென்றனர். பின்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் குழந்தைசாமி, தினகரன் ஆகியோர் செய்திருந்தனர்.