அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு குறித்த பயிற்சி


அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு குறித்த பயிற்சி
x
தினத்தந்தி 28 July 2018 3:45 AM IST (Updated: 28 July 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ‘நீட்’ தேர்வு குறித்த பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.

ஆண்டிப்பட்டி,


தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வில் கலந்து கொள்ள ஆர்வத்தினையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில், தேனி மாவட்டத்தில் உள்ள 94 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ம.பல்லவிபல்தேவ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், மருத்துவக்கல்வி படிப்பதற்கு தேவையான ‘நீட்’ தேர்வு மற்றும் இதர தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கும். இதற்காகவே இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாளில் நடைபெறும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் நீங்கள், அவர் கூறியபடி உயர்ந்த லட்சியங்களையும், கொள்கைகளையும் அடைய கனவு காணுங்கள். அதன்படி ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார். 

Next Story