டி.கல்லுப்பட்டி அருகே குழாய் உடைப்பால் 10 கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி
டி.கல்லுப்பட்டி அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் 10 கிராமங்களுக்கு வினியோகம் தடைபட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கொட்டாணிப்பட்டி, நல்லமரம், முத்துலிங்காபுரம், வையூர், ரெட்ரபட்டி, வெங்கடாசலபுரம், குச்சம்பட்டி, கோபாலபுரம், உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு சேடபட்டி–ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையம் அருகே குடிநீர் குழாய் கடந்த 25 நாட்களுக்கு முன்பு உடைந்து விட்டது. இதனால் மேற்கண்ட 10 கிராமங்களுக்கும் கூட்டுக் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த கிராமங்களில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைக்கும் குடிநீர் உவர் தண்ணீராக உள்ளதால் குடிப்பதற்கு உகந்த நிலையில் இல்லை. இதனால் இக்கிராம மக்கள் தங்கள் தேவைக்கு குடம் ஓன்றுக்கு ரூ.10, ரூ.12 என விலை கொடுத்து தண்ணீரை வாங்கி குடிக்கின்றனர்.
மேலும் நீண்ட தூரம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதிக்கு நடந்து சென்றும், தங்கள் கிராம அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்றும் தண்ணீர் எடுத்து வருகின்றனர். கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைப்பதற்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை என இப்பகுதி பொது மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் ரத்தினம் கூறுகையில், “உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி 2 அல்லது மூன்று நாட்களில் முடிவடைந்து விடும்” என்றார்.