100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டார்கள்.
தாளவாடி,
தாளவாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 500–க்கும் மேற்பட்டோர் நேற்று பகல் 11 மணி அளவில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், தாளவாடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் மோகன் ஆகியோர் தலைமையில் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அங்கு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் உள்ளிட்ட சிலர் அலுவலகத்துக்கு உள்ளே சென்றார்கள். அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி இல்லை. அங்கிருந்த அலுவலக மேலாளரிடம் பொதுமக்களின் குறைகளை கூறினார்கள்.
அவர்கள் கூறியதாவது, ‘தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 10 ஊராட்சிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக அவர்களுக்கு அந்த திட்டத்தின் கீழ் எந்த பணியும் வழங்கப்படவில்லை. அடையாள அட்டையை அதிகாரிகள் பறித்துக்கொண்டுவிட்டார்கள். ஆனால் பொதுமக்களின் வங்கி கணக்கில் மாதம்தோறும் பணம் செலுத்தி வந்தார்கள். அதன்பின்னர் அந்த பணத்தை நேரில் வந்து அதிகாரிகள் பெற்றுக்கொண்டார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பணி வழங்க வேண்டும்.’ என்றனர்.
அதற்கு அலுவலக மேலாளர், ‘ஒப்பந்ததாரர்கள் மூலம் குட்டை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்து வந்தோம். இனிமேல் அந்த பணி பொதுமக்களுக்கு வழங்கப்படும்.’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து வெளியே சென்றார்கள். இதுபற்றி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.