மாவட்டம் முழுவதும் சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்


மாவட்டம் முழுவதும் சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2018 3:45 AM IST (Updated: 28 July 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒட்டன்சத்திரம்,


தமிழக அரசு சொத்துவரியை உயர்த்தி உள்ளது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தவகையில் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகம் முன்பு, தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட அவைத்தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் சோதீஸ்வரன், தர்மராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழ்நாடு அரசு சொத்து வரியை வணிகப்பகுதிக்கு 100 சதவீதம், குடியிருப்பு பகுதிக்கு 50 சதவீதமும் உயர்த்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், பொதுமக்களின் கோரிக்கைகளை செயல்படுத்த பிரதிநிதிகள் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் மத்திய அரசு நிதி கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், வரிச்சுமையை பொதுமக்களின் மீது அ.தி.மு.க. அரசு திணித்துள்ளது, என்றார்.

அதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜப்பா வரவேற்றார். அவைத்தலைவர் பசீர்அகமது, துணை செயலாளர் நாகராஜன், தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது சொத்துவரி உயர்வுக்காக தமிழக அரசை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெறக்கோரி வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

இதில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழக அரசு கடந்த ஓராண்டாக சொத்துவரியை படிப்படியாக உயர்த்தி வந்தது. இதனால் ரூ.1,000 வரி செலுத்தியவர்கள், ரூ.3 ஆயிரம் கட்டி வருகின்றனர். தற்போது மேலும் வரி உயர்த்தி இருப்பதால் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் தி.மு.க. போராட்டம் நடத்துவதாக அறிவித்ததும் பெயரளவுக்கு குறைத்து இருக்கிறது, என்றார்.

பழனி நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க. நகர செயலாளர் தமிழ்மணி, ஒன்றிய செயலாளர் சவுந்திரபாண்டியன், நகராட்சி முன்னாள் தலைவர்கள் உமாமகேஸ்வரி, வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துவரியை உயர்த்தியதை கண்டித்தும், வரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் கோஷமிட்டனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story