கோத்தகிரி பகுதியில் களைகட்டும் ‘டீ ஒயின்‘ தயாரிப்பு மானியம் கிடைக்குமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு


கோத்தகிரி பகுதியில் களைகட்டும் ‘டீ ஒயின்‘ தயாரிப்பு மானியம் கிடைக்குமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 28 July 2018 3:42 AM IST (Updated: 28 July 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் ‘டீ ஒயின்‘ தயாரிப்பு களைகட்டி வருகிறது. குடிசை தொழிலாக தொடங்க மானியம் கிடைக்குமா? என்று இளைஞர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தேயிலை விவசாயத்தை சார்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். இதனிடையே பசுந்தேயிலை விலை வீழ்ச்சி, நிரந்தரமில்லா விலை நிர்ணயம் ஆகிய காரணங்களால் அவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர். எனவே தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கும், ஏல மையங்களில் தேயிலைத்தூளுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான சிறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் இருந்து பறிக்கும் தேயிலையை பயன்படுத்தி குடிசை தொழிலாக ‘கிரீன் டீ‘ தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை நல்ல விலைக்கு விற்பனை செய்து, கணிசமான லாபமும் ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தேயிலைத்தூளில் இருந்து வேறு ஏதாவது தயாரிக்க முடியுமா? என்று இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இமாச்சலபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் சி.டி.சி., ஆர்தோடக்ஸ் மற்றும் கிரீன் டீ ஆகிய ரக தேயிலைத்தூளில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுவதை கோத்தகிரியிலும் செயல்படுத்தி உள்ளனர். அதில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது தனிச்சிறப்பு. இதுகுறித்து தேயிலைத்தூளில் இருந்து ஒயின் தயாரித்து வரும் கோத்தகிரி கிருஷ்ணாபுதூரை சேர்ந்த ஜான் சிரில் மற்றும் மிளிதேன் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஆகிய இளைஞர்கள் கூறியதாவது:–

பழ வகைகளில் இருந்து ஒயின் தயாரிக்கப்படுவதை போலவே தேயிலைத்தூளில் இருந்து ஒயின் தயாரிப்பது எளிய முறையாகும். சுற்றுலா தலமான நீலகிரியில் சுற்றுலா பயணிகளிடம் இந்த ‘டீ ஒயின்‘ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் கணிசமான லாபத்தையும் ஈட்ட முடிகிறது. அதிகளவில் முதலீடு செய்யாமல், குடிசை தொழிலாகவே இதை செய்யலாம்.

3 லிட்டர் தண்ணீரில் 250 கிராம் எடையுள்ள தேயிலைத்தூளை கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டிய நீரை எடுத்து ஆற வைத்த பின், அதில் 1½ கிலோ சர்க்கரை, 100 கிராம் உலர் திராட்சை, ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழச்சாறு சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் காற்று புகாதவாறு 30 நாட்கள் மூடி வைக்க வேண்டும். அதன்பின்னர் அதை நன்கு வடிகட்டி மரத்தால் ஆன குடுவையிலோ அல்லது கண்ணாடி பாட்டில்களிலோ ஊற்றி வைத்து விற்பனை செய்யலாம். 3 லிட்டர் ‘டீ ஒயின்‘ தயாரிக்க அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே செலவாகும். ஆனால் ஒரு லிட்டர் ‘டீ ஒயினை‘ ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யலாம்.

ஆல்கஹால் இல்லாத இந்த ஒயின், நினைவு பிறழ்தல் நோய், சளி தொல்லை, இதய வால்வு தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாகி உள்ளது. தேயிலை விளையும் மலைப்பிரதேசங்களில் இந்த தொழிலில் ஈடுபடுவது எளிது. ஆனால் சமவெளி பகுதியில் இதற்கு கூடுதல் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். வர்த்தக ரீதியாக ‘டீ ஒயின்‘ தயாரிப்பில் ஈடுபட கிட்டத்தட்ட முதலீட்டுக்கு ரூ.1 லட்சமே போதுமானது. எனவே பசுந்தேயிலை விலை வீழ்ச்சியால் காய்கறி விவசாயம் அல்லது வேறு பணிகளுக்கு மாறுவது போன்ற நிலையில் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்த தொழில் சிறந்த பயன் அளிக்கிறது. இதனால் குடிசை தொழிலாக ‘டீ ஒயின்‘ தயாரித்து வரும் பெரும்பாலானோருக்கு கணிசமான லாபம் கிடைத்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் உடல் நலத்திற்கு சிறந்த பானமாக இருப்பதால், சுற்றுலா பயணிகளின் கவனமும் அதை நோக்கி செல்ல தொடங்கி விட்டது. ‘டீ ஒயின்‘ தயாரிப்பை குடிசை தொழிலாக தொடங்க மானியம் வழங்கவும், முறையான பயிற்சி வழங்கவும் தேயிலை வாரியம் முன்வர வேண்டும் என்பதே இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story