திருப்பூருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை அமைச்சர் தங்கமணி பேச்சு
தொழில் நகரமான திருப்பூருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பல்லடத்தில் நடந்த மின் வாரிய அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
பல்லடம்,
பல்லடம் பகுதி மின் நுகர்வோரின் வசதிக்காக பல்லடத்தில் மின் பகிர்மான வட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி பல்லடம்-திருச்சி ரோட்டில் பெரிய பாலம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் பல்லடம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து இந்த புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்கள். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-
மின்சாரத்துறையில் தமிழகத்தை பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு மின் மிகை மாநிலமாக தமிழகம் உருவாகி வருகிறது. விவசாயத்துக்கு இலவச மின்சார இணைப்பு பெற புதிதாக தட்கல் திட்டம் உருவாக்கப்பட்டு விவசாய மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு விவசாயத்திற்காக 30 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தட்கல் திட்டத்தில் விவசாயிகள் 10 ஆயிரம் மின் இணைப்பு பெற பதிவு செய்ய ஒரு மாத காலம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்ட 2 நாட்களிலேயே அதிக அளவில் பதிவுகள் செய்துள்ளார்கள். மேலும் இந்த ஆண்டு விவசாயத்துக்கு 20 ஆயிரம் இலவச மின் இணைப்புகளும் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல்லடம் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் இருந்து பல்லடம் மற்றும் காங்கேயம் கோட்டங்களையும், உடுமலை மின்பகிர்மான வட்டத்தில் இருந்து தாராபுரம் கோட்டத்தையும் பிரித்து புதிதாக பல்லடம், காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய கோட்டங்களை ஒருங்கிணைத்து பல்லடம் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் புதிதாக தொடங் கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
தொழில்நகரமான திருப்பூருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மக்களின் தேவையை அறிந்து செயல்படும் இந்த அரசுக்கு என்றென்றும் பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒருவருக்கு 50 நாட்டுக்கோழிகள் வீதம் சுமார் 70 ஆயிரம் நாட்டுக்கோழிகள் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், பல்லடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகளும் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகளும் அதிகப்படியான அளவில் உள்ளன. இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையின்படி பல்லடம் பகிர்மான வட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சி.மகேந்திரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), உ.தனியரசு (காங்கேயம்), மின் பகிர்மான இயக்குனர் ஹெலன், மின் தொடரமைப்பு இயக்குனர் செந்தில்வேலன், கோவை மண்டல தலைமை பொறியாளர் மணி, மின் தொடரமைப்பு கழக தலைமை பொறியாளர் சாந்தி, பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தமிழ்சேகர், செயற்பொறியாளர்கள், பல்லடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் நடராஜன், சித்துராஜ் சரளை, ரத்தினசாமி, கல்லம்பாளையம் ராமமூர்த்தி, வைஸ் பழனிசாமி, பொங்கலூர் நிர்வாகிகள் சிவாச்சலம், பாபு, துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் கோவை மண்டல மின்துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர்கள் பி.தங்கமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை பொது கட்டுமான வட்டம், கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை வடக்கு, நீலகிரி, பல்லடம் மற்றும் திருப்பூர் ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் மின் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் பொதுமக்களின் அடிப்படை தேவையான மின்சாரம் எவ்வித தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.
Related Tags :
Next Story