நாகர்கோவில் அருகே பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


நாகர்கோவில் அருகே பரபரப்பு : கிறிஸ்தவ ஆலயத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 July 2018 5:24 AM IST (Updated: 28 July 2018 5:24 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவ ஆலயத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திங்கள்சந்தை,

கிறிஸ்தவ ஆலயத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். வேலை கிடைத்தும் செல்ல விருப்பம் இல்லாததால் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நாகர்கோவில் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. நேற்று காலை இந்த ஆலயத்துக்கு ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்து விட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து காவலாளி ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பது போன்று கிடந்தார். அவர் அருகில் விஷப்பாட்டில் ஒன்றும் கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆலய காவலாளி அருகில் சென்று பார்த்தார். அப்போது அந்த வாலிபர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதுபற்றி காவலாளி, கோவில் பங்குத்தந்தையிடம் கூறினார். தொடர்ந்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிறிஸ்தவ ஆலயத்தில் வாலிபர் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் மணிக்கட்டி பொட்டலை அடுத்த முகிலன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் எடில்ராஜ் பினோ (வயது 23). இவர், வேளாண்மைத்துறையில் பி.எஸ்சி படித்து முடித்துள்ளார். அவருக்கு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் வேளாண் துறையை சார்ந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வருகிற 31-ந் தேதி வேலையில் சேர்வதற்கான அழைப்பு கடிதமும் வந்தது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், எடில்ராஜ் பினோவிற்கு அந்த வேலையில் சேர விருப்பம் இல்லாமல், உற்சாகமின்றி இருந்துள்ளார். நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த அவர், விஷ பாட்டிலுடன் சுங்கான்கடையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்துள்ளார். அங்கு அவர் பிரார்த்தனை செய்து விட்டு விஷத்தை குடித்து இந்த விபரீத முடிவை தேடி கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்த எடில்ராஜ் பினோ குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். எடில்ராஜ் பினோ உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிறிஸ்தவ ஆலயத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story