ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தியதாக 2 பெண்கள் கைது
ரெயிலில் ரேஷன்அரிசி கடத்திய 2 பெண்களை ரெயில்வே போலீசார் கைது செய்து 1 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே போலீசார் அங்கு நின்று செல்லும் ரெயில்களில் சோதனையிட்டனர். அப்போது சென்னையிலிருந்து மைசூரு நோக்கி சென்ற ரெயிலின் பொது பெட்டியில் சோதனையிட்ட போது, சிறு சிறு மூட்டைகளில் பதுக்கி வைத்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அரக்கோணம் அருகே உள்ள நெமிலியை சேர்ந்த குமார் என்பவர் மனைவி தேவி (வயது 39), பாணாவரத்தை சேர்ந்த பாலன் என்பவர் மனைவி சிவகாமி (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன்அரிசியை வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
ரெயில்வே போலீசார் ரெயில்களில் சோதனை நடத்தும்போது கடத்தப்படும் ரேஷன்அரிசியை மட்டுமே பறிமுதல் செய்து வந்தனர். இதுவரை 100 டன்னுக்கு மேல் ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டும் அவற்றை கடத்தியவர்களை கைது செய்தது இல்லை. இந்த நிலையில் தற்போது ரேஷன்அரிசி கடத்தியவர்களை அதே ரெயிலில் பிடித்து போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும். போலீசார் கூறுகையில் ரேஷன்அரிசி கடத்தலை தடுக்க சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அதில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story