உத்தவ் தாக்கரே அயோத்தி செல்கிறார்


உத்தவ் தாக்கரே அயோத்தி செல்கிறார்
x
தினத்தந்தி 28 July 2018 6:11 AM IST (Updated: 28 July 2018 6:11 AM IST)
t-max-icont-min-icon

உ.பி.யில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக உத்தவ் தாக்கரே அயோத்தி செல்கிறார்

மும்பை,

2 நாட்கள் பயணமாக உத்தரபிரதேசம் செல்லும் உத்தவ் தாக்கரே சர்ச்சைக்குரிய அயோத்திக்கு செல்ல உள்ளார்.

கூட்டணி கட்சியாக விளங்கினாலும் பா.ஜனதாவை சிவசேனா தொடர்ந்து வசைப்பாடி வருகிறது. சமீபத்தில் சாம்னா பத்திரிகைக்கு உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், நேரடியாகவே மோடி தலைமையிலான மத்திய அரசையும், பட்னாவிசின் மாநில அரசையும் வம்புக்கு இழுத்தார். அதில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா தற்போதே அயோத்தியில் ராமர் கோவிலை கட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அயோத்தி பிரச்சினையை பா.ஜனதா கிளப்பும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே, 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தரபிரதேச மாநிலம் செல்கிறார். அப்போது சர்ச்சைக்குரிய அயோத்திக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசிக்கும் செல்கிறார். இந்த தகவலை உறுதிப்படுத்திய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் உத்தவ் தாக்கரே பூஜை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சிவசேனா போட்டியிட இருக்கிறது. எனவே கட்சியை பலப்படுத்தும் நோக்கத்துடன் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளலாம் என கருதப்படுகிறது. இருப்பினும் சர்ச்சைக்குரிய அயோத்திக்கு செல்வதால் உத்தவ் தாக்கரேயின் உத்தரபிரதேச பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சிவசேனா கட்சியின் நிறுவனரும், உத்தவ் தாக்கரேவின் தந்தையுமான மறைந்த பால் தாக்கரே முக்கிய அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story