நிலத்தடியில் விவசாயம்... கலக்கும் பொலிவிய விவசாயிகள்!


நிலத்தடியில் விவசாயம்... கலக்கும் பொலிவிய விவசாயிகள்!
x
தினத்தந்தி 28 July 2018 11:15 AM IST (Updated: 28 July 2018 11:15 AM IST)
t-max-icont-min-icon

வல்லவன் எந்தச் சூழ்நிலையிலும் வெல்வான் என்பதற்கு உதாரணமாய், நிலத்துக்கு அடியில் பசுமைப் பண்ணையை உருவாக்கிச் சாதித்திருக்கிறார்கள், பொலிவிய நாட்டு விவசாயிகள்.

பொலிவியாவின் அல்டிபிலானோ, உலகின் மிகப்பெரிய, உயரமான பீடபூமிகளில் ஒன்று.

இங்கு வறட்சியில் இருந்தும், திடீர் வெள்ளத்தில் இருந்தும், அதிகரிக்கும் வெப்பநிலையில் இருந்தும் தங்களது பயிர்களைக் காப்பதற்காக விவசாயிகள் பூமிக்கு அடியில் விவசாயம் செய்கின்றனர்.

காலநிலை மாற்றத்துக்கு குறைந்தபட்சம் காரணமான நாடுகளில் ஒன்றாக பொலிவியா இருந்தாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்நாடும் அதிகம் பாதிக்கப்படுகிறது.

சுமார் 60 சதவீத பொலிவிய விவசாயிகள் அல்டிபிலானோ பீடபூமியில் வாழ்கின்றனர். இப்பகுதி, வறட்சி, உறைபனி, அதிக காற்று, கதிர்வீச்சு ஆகியவற்றுக்குப் பெயர் போனது.

இங்கு, பாரம்பரிய முறைப்படி நிலத்தில் விவசாயம் செய்தால், அரிதான மழை மற்றும் மண் அரிப்பினால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே தங்கள் குடும்பம் மற்றும் கால்நடைகளுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சில பொலிவிய விவசாயிகள் நிலத்துக்கு அடியில் பசுமை வயல்களை உருவாக்கியுள்ளனர். இந்த வகை நிலத்துக்கு அடியிலான வயல்களை ‘வலிபினிஸ்’ என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

இந்த வலிபினிசில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதன் மேற்கூரை மட்டும் வெளியே தெரிகின்றது. ஆனால், வறண்ட பூமியில் இருந்து பிரித்து அறியமுடியாதபடி இந்த வயல்கள் உள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது வலிபினிசை உருவாக்கிய விவசாயி கேப்ரியல், இந்த முறை செலவு குறைவானதாகவும், எளிதாகவும் உள்ளதாகக் கூறுகிறார். பணத்தைச் சேமிக்கவும், தனது ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்கவும் இது உதவுவதாக அவர் கூறுகிறார்.



‘‘நாங்கள் சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்குவதில்லை. நாங்களே காய்கறிகளை விளைவிக்கிறோம்’’ என்கிறார் கேப்ரியல்.

‘‘அதிகரிக்கும் வெப்பநிலையாலும், ஒழுங்கற்ற மழையாலும், திறந்தவெளியில் விவசாயம் செய்வது சாத்தியமற்றது’’ என்கிறார் அவர்.

வெளியே என்ன வெப்பநிலை இருந்தாலும், நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் வலிபினிஸ் நிலையான நுண் தட்பவெப்பநிலையை வைத்திருக்கும்.

இது இப்பகுதியின் பண்டைய விவசாய முறை அல்ல. இந்தத் தொழில்நுட்பம், சுவிட்சர்லாந்து தன்னார்வலர் பீட்டர் ஐசல்லி என்பவரால் 25 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது.

கிராமப்புற மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காக பீட்டரின் திட்டத்துக்கு ஐரோப்பிய மேம்பாட்டு நிதியகம் நிதியளித்தது.

முழுமையாகச் செயல்படும் ஒரு நிலத்தடிப் பண்ணையை பீட்டர் உருவாக்கினார். ஆனால், பீட்டரின் சோதனைப் பண்ணை பின்னர் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தொழிலதிபர் மைக்கேல் ஜெமியோவின் கார் இப்பகுதி வழியாகச் சென்ற போது அது பழுதானது. உதவி தேடி, கைவிடப்பட்ட தோற்றமுள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு மைக்கேல் சென்றார். ‘விற்பனைக்கு’ என்று எழுதப்பட்ட ஒரு பலகை மட்டுமே பண்ணை வீட்டின் வெளியே இருந்தது.

இது அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தின் தொடக்கமாக இருந்தது.

விவசாயம் குறித்து எதுவும் அறியாத மைக்கேல், தொலைதூரப் பகுதியான எல் ஆல்டோவில் பண்ணையை வாங்க முடிவு செய்தார். தற்போது 18 வலிபினிஸ் உட்பட, பல பண்ணைகளை இங்கு நிர்வகித்து வருகிறார் மைக்கேல்.

இவருடன் பல உள்ளூர் விவசாயிகளும், எந்தக் காலநிலையிலும் பழங்கள், காய்கறிகள் மற்றும் சாலட் இலைகளை மிக அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர்.

இந்த ‘வலிபினிஸ்’ எப்படி அமைக்கப்படுகிறது?

நிலத்தை ஒரு மீட்டர் ஆழத்துக்குத் தோண்ட வேண்டும். தண்ணீரை வடிகட்டுவதற்காகக் கற்களை நிரப்ப வேண்டும். பண்ணையைச் சுற்றி நான்கு செங்கல் சுவர்களையும், ஒரு கதவையும், காற்றோட்டத்துக்கு ஒரு ஜன்னலையும் அமைக்க வேண்டும். 30 டிகிரிக்கு ஒரு கூரை அமைக்க வேண்டும். அதற்கு மேலே, நாள் முழுவதும் சூரிய ஒளியை உறிஞ்சுவதற்கு கிழக்குத் திசையில் ஓர் உயரமான சுவரை அமைக்க வேண்டும்.

வழக்கமான பசுமைப் பண்ணைகளுடன் ஒப்பிடுகையில், வலிபினிஸ் மலிவான மற்றும் மிகவும் பயனுள்ள பண்ணையாக உள்ளது. ஆனால், இந்தப் பண்ணைகளை நீண்டகால திட்டமாகச் செயல்படுத்த வேண்டும்.

வலிபினிஸ் பண்ணை முறையில் விவசாயம் செய்வதற்கு குறைந்த அளவு நீர் போதும் என்று பொலிவிய விவசாயிகள் கூறுகின்றனர். 

Next Story