14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரொட்டி தயாரிப்பு!


14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரொட்டி தயாரிப்பு!
x
தினத்தந்தி 28 July 2018 12:24 PM IST (Updated: 28 July 2018 12:24 PM IST)
t-max-icont-min-icon

சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரொட்டி தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தீயில் சுடப்பட்ட அந்த உணவுப்பொருள், தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய உணவுகள் போன்றும் ருசித்திருக்கும் என்று கூறப் படுகிறது.

அந்த ரொட்டிக்குள், வறுத்த இறைச்சியை வைத்து அக்கால மக்கள் சாப்பிட்டிருக்கக்கூடும். அதுவே பழமையான ‘சாண்ட்விச்’சாக இருந்திருக்கிறது.

ஜோர்டான் நாட்டின் பாலைவனத்தில் இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பார்லி மற்றும் கோதுமையில் இருந்து தயாரிக்கப்பட்ட மாவில், பொடியாக்கப்பட்ட கிழங்குகள் மற்றும் தண்ணீர் சேர்க்கப்பட்டு, கற்காலத்தில் ரொட்டிகள் சுடப்பட்டிருக்கின்றன.

ஜோர்டானில் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ரொட்டி செய்யப்பட்டது எப்படித் தெரியுமா?

கோதுமை மற்றும் பார்லியில் இருந்து மாவு தயாரிக்கப்பட்டது. நீரில் வளரும் காட்டுத் தாவரங்களின் கிழங்குகள் அரைக்கப்பட்டு உலர வைக்கப்பட்டது. அதில் தண்ணீர் சேர்த்து பிசையப்பட்டது. பின், நெருப்பினால் சூடாக்கப்பட்ட கற்களில் ரொட்டி சுடப்பட்டது.

‘‘பல்வேறு உணவுப் பொருட்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, சமையல் செய்ததற்கான பழமையான ஆதாரம் இது’’ என்று லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொரியன் புல்லர் கூறினார்.

தட்டையான ரொட்டிகளுடன், வறுத்த மான் இறைச்சி போன்றவற்றை அவர்கள் உண்டுள்ளனர்.

உலகில் உள்ள பல நாடுகளில் ரொட்டிகள் பிரதான உணவாக இருக்கின்றன. ஆனால், இது எப்போது தோன்றியது என்ற தகவல் தெளிவாக இல்லை.

தற்போது வரை, துருக்கியில் ரொட்டி தயாரிக்கப்பட்டதற்கான பழமையான ஆதாரங்கள் உள்ளன. அந்தக் கண்டுபிடிப்புகள் 9 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை.

இதுதொடர்பாக இரண்டு கட்டிடங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பெரிய வட்டமான நெருப்புத் தகடுகளும், அவற்றில் ரொட்டித் துகள்களும் இருந்தது கண்டறியப்பட்டது.

கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இருக்கும் உணவுக் கலாசாரத்தின் இணைப்பாக ரொட்டி திகழ்வதாக கோபன்ஹேகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அமையா கூறுகிறார்.

அக்காலத்தில் மக்கள் வேட்டைக்காரர்களாக இருந்தார்கள். மான்கள், முயல்கள், பறவைகள் போன்றவற்றை அவர்கள் வேட்டையாடி உண்டிருக்கின்றனர். மேலும், உணவுக்காக பழங்கள் மற்றும் தானியங்களையும் அவர்கள் நம்பியிருந்தனர்.

கொண்டாட்டம் அல்லது விருந்துக் காலங்களில் மக்கள் கூடும்போது ரொட்டிகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவையெல்லாம், மனிதன் முறையான விவசாயத்தில் ஈடுபடுவதற்கு முன் நடந்தவை. முறையான விவசாயத்துக்கு முன்பாக அக்கால மக்கள் தானியப் பயிர்களை வளர்க்க ஆரம்பித்தனர்.

அப்போது தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் மெல்லியதாக இருந்திருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாம் சாப்பிடும் ரொட்டி, மிக நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது! 

Next Story