புலிகளை காப்போம்; மிருக நேயம் பேணுவோம்
காடுகளின் வளமே மனித இனத்தின் வளம். நாம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்கும் சுற்றுப்புறச்சூழல் பாதிப்புக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. நம்மால் காடுகளில் ஏற்படும் பாதிப்புகள் நம்மையே பாதிக்கிறது.
நாளை (ஜூலை 29-ந்தேதி) சர்வதேச புலிகள் தினம்.
இயற்கையின் ஒவ்வொரு இனமும் சிறப்பானவை, இன்றியமையாதவை. அந்த வகையில் பூமிப்பந்தை காப்பதில் புலி முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவின் தேசிய விலங்கு வங்கப் புலி. புலி ஒரு தனிமை விரும்பி. இனப்பெருக்க காலம் மற்றும் தன் குட்டிகளை வளர்க்கும் காலம் தவிர அது எப்போதும் தனியாகத்தான் இருக்கும்.
புலி தன் எல்லையை பேணுவதில் மிகுந்த கவனமாக இருக்கும். நன்கு வளர்ந்த ஆண் புலி சுமார் நூறு சதுர கிலோமீட்டரும், பெண் புலி சுமார் இருபது சதுர கிலோமீட்டரும் தனது எல்லையை வரையறுத்து செயல்படும். மற்றொரு புலி தனது எல்லைக்குள் வந்து விட்டால் எல்லைப் போர் உருவாகும். சில சமயம் இப்போர் பலியில் கூட முடியும். புலி மிகவும் கூச்ச சுபாவம் உள்ள உயிரி. மனித நடமாட்டம் லேசாகத் தென்படின் உடனடியாக விலகிவிடும்.
புலிகள் அதிகம் உள்ள காடுகள் எப்பொழுதும் வளமான காடுகளாகக் கருதப்படும். சுருங்கச் சொன்னால் புலிகள் அதிகம் இருப்பது அதன் இரையான மான்கள் அதிகம் இருப்பதை காட்டும். மான்கள் அதிகம் இருப்பது அதன் இரையான இலை, தழை, புல் முதலியவை அதிகம் செழித்திருப்பதை உணர்த்தும்.
மான்களும் மற்ற விலங்குகளும் பெருகி காட்டை அழித்துவிடாத வண்ணம் புலிகள் அதை கட்டுப் படுத்தி ஒரு சம நிலையில் வைத்திருக்கும். அதனால் தான் புலி இருக்கும் காடுகளில் புலியை தலைமை இனமாகக் கருதுகிறார்கள்.
சென்ற நூற்றாண்டில் மட்டும் உலகில் சுமார் 97 சதவீதம் புலிகளை இழந்துள்ளோம். உலகில் வனங்களில் உள்ள புலிகளில் எழுபது சதவீதம் இந்தியாவில் தான் உள்ளன. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலை, மத்திய இந்தியக் காடுகள், இமய மலைக்காடுகள், சுந்தரவனக் காடுகள் என்று புலிகளின் எல்லை மிகவும் சுருங்கிவிட்டது.
புலிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு இருபெரும் காரணங்கள் உண்டு. ஒன்று, தோல், எலும்பு, நகம் முதலியவற்றுக்காக அவை வேட்டையாடப்படுவது. மற்றொன்று, முன்னேற்றம் என்ற பெயரில் புலிகளின் வாழ்விடங்கள் அழிக்கப் படுவது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தேவைகளும் பெருகிக் கொண்டே போகிறது. நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் முதலில் கை வைப்பது வனங்களில் தான். கனிம வளங்கள், நிலக்கரி, மருந்து, மரம் என அனைத்துக்கும் காடுகள் அழிக்கப்படுகின்றன. வனவிலங்கு உறுப்புகளின் சந்தை உலகமெங்கும் பலமாக உள்ளது. அது மூடப் பழக்கங்களால் கட்டமைக்கப்பட்டது. இத்தகைய மனித நடவடிக்கையால் புலி, யானை போன்ற விலங்குகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு 70 சதவீதம் இந்திய நிலப்பரப்பில் உலவி வந்த புலிகள், இன்று 3 சதவீதத்துக்கும் குறைவான நிலப்பரப்பில் தான் உள்ளது.
புலிகளின் முக்கியத்துவம் அறிந்து அதைக் காப்பதற்காக 1973-ல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அழியும் நிலையிலிருந்த புலிகளை காக்கவும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாத்துப் பெருக்கவும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. புலிகள் சரணாலயங்களில் உள்ள மக்களுக்கு மாற்று இடங்கள் கொடுப்பது, புலிகள் பாதுகாப்புப் படை உருவாக்குவது, மனித விலங்கு மோதலைத் தவிர்ப்பது போன்றவற்றிற்கு போதிய நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டம் இன்று ஓரளவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம். ஏனென்றால், 2006-ம் ஆண்டு வெறும் 1,411 புலிகள் தான் இந்தியாவில் இருந்தததாக அறிக்கை வந்தது. தற்போது, புலிகளின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2006-ம் ஆண்டு தமிழகத்தில் வெறும் 76 புலிகள் இருந்த நிலையில், 2014-ல் 229 ஆக உயர்ந்தது. இதற்கு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதும், புலிகளுக்கான இரை கணிசமான அளவு உயர்ந்துள்ளதும், அதன் வாழ்விடங்கள் எந்த வித தொந்தரவுகளும் இல்லாமல் இருப்பதுமே முக்கியக் காரணங்கள் ஆகும்.
ஆனாலும், இந்த வெற்றி போதாது என்று சொல்லும் அளவுக்கு நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. தற்சமயம் வனத்துறையில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறை, இன்னும் தொடரும் பழைய பாதுகாப்பு முறைகள், அதிகரிக்கும் நுகர்வுக் கலாசாரத்தினால் காடுகளின் மீது ஏற்படும் அழுத்தங்கள் என சவால்கள் பல உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்து, நமது நுகர்வுக் கலாசாரத்தைக் குறைத்துக் கொண்டால் காடுகளும், புலிகளும், நாமும் ஆரோக்கியமான, வளமான வாழ்வு வாழலாம்.
சாந்தாராம், நல்லகொண்டா மாவட்ட வன அலுவலர், தெலுங்கானா
Related Tags :
Next Story