எட்டயபுரத்தில் துணிகரம் தொழிலாளி வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு போலீசார் தீவிர விசாரணை
எட்டயபுரத்தில் தொழிலாளி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எட்டயபுரம்,
எட்டயபுரத்தில் தொழிலாளி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன தொழிலாளி
எட்டயபுரம் ராஜா நகரைச் சேர்ந்தவர் அருணாசல துரை (வயது 40). இவர் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரசுவதி (35). இவர் அப்பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு லட்சுமி பிரியா (15), சங்கவி பிரியா (12) ஆகிய 2 மகள்களும், ராஜ கருப்பசாமி (8) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.
வீட்டில் குழந்தைகளுடன் சரசுவதி வசித்து வருகிறார். விடுமுறையில் அருணாசல துரை வீட்டுக்கு வந்து செல்வார். சரசுவதி தினமும் காலையில் தன்னுடைய குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு, தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வது வழக்கம். அப்போது அவர் தனது வீட்டை பூட்டி விட்டு, சாவியை வீட்டின் நுழைவுவாயில் அருகில் உள்ள படத்துக்கு பின்னால் வைத்து செல்வார். மாலையில் வீட்டுக்கு வரும் குழந்தைகள், அந்த சாவியை எடுத்து வீட்டுக்குள் செல்வார்கள்.
நகைகள் திருட்டு
சம்பவத்தன்று சரசுவதி அப்பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவுக்கு நகைகளை அணிந்து செல்வதற்காக, தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் தீவிர விசாரணை
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்,‘ சரசுவதி தினமும் வேலைக்கு செல்லும்போது தனது வீட்டை பூட்டி விட்டு, சாவியை வெளியே வைத்து செல்வதை மர்மநபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். சம்பவத்தன்று மர்மநபர்கள் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே நுழைந்து உள்ளனர். பீரோவையும் திறந்து நகைகளை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story