வேலை நிறுத்தம் வாபஸ்: தூத்துக்குடியில் 8 நாட்களுக்கு பின் லாரிகள் ஓடின தேங்கிய உப்பு மூட்டைகள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன
லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து நேற்று தூத்துக்குடியில் 8 நாட்களுக்கு பின்னர் லாரிகள் இயங்கின.
தூத்துக்குடி,
லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து நேற்று தூத்துக்குடியில் 8 நாட்களுக்கு பின்னர் லாரிகள் இயங்கின. உப்பளப் பகுதியில் தேங்கி கிடந்த உப்பு மூட்டைகள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வேலைநிறுத்தம்
இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டீசல் விலை உயர்வை கண்டித்தும், காப்பீட்டு தொகை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பழைய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தால் சரக்கு போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது.
சரக்கு போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படும் சரக்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் பெரும்பாலான சரக்கு பெட்டகங்கள் துறைமுகத்தில் தேங்கி உள்ளன. இதனால் தூத்துக்குடியில் இருந்து உப்பு விற்பனைக்காக கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு இருக்கிறது. லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக காய்கறிகள் மற்றும் சரக்குககள் பஸ்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டன.
பேச்சு வார்த்தை
இந்த நிலையில் டெல்லியில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சக உயர் அதிகாரிகளுக்கும், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
இதனையடுத்து நேற்று தூத்துக்குடியில் 8 நாட்களுக்கு பின்னர் லாரிகள் வழக்கம் போல் இயங்கின. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து வழக்கம் போல் நடந்தது. தூத்துக்குடி உப்பளங்களில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த உப்பு மூடைகள் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story