மின்வாரிய இ.டெண்டரில் எந்தவித ஒளிவு, மறைவும் இல்லை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி


மின்வாரிய இ.டெண்டரில் எந்தவித ஒளிவு, மறைவும் இல்லை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 29 July 2018 4:30 AM IST (Updated: 29 July 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய இ.டெண்டரில் எந்தவித ஒளிவு, மறைவும் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டியில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடந்தது. இதனை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜி.பி.வருதராஜன், ஒன்றிய துணை செயலாளர் ஜி.கே.வீரப்பன், பேரூர் செயலாளர் ராஜேந்திரன், இணைச்செயலாளர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

அதன் பிறகு அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விளை நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால் விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படும்.

ஒரு யூனிட் 10 ரூபாய், 15 ரூபாய் என்ற விலையில் கடந்த காலத்தில் மின்சாரம் வாங்கப்பட்டது. இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது குறைந்த விலைக்கு தான் மின்சாரம் வாங்குகிறோம். தேசிய மின்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களில் இருந்து 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் குறைந்த விலையில் தான் வாங்கப்படுகிறது.

தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது நீர்மின் நிலையங்கள் மூலம் 1,600 மெகாவாட், காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

நகராட்சி பகுதிகளை பொறுத்தவரை புதைவட மின் வயர்கள் அமைக்கும் பணி முதன்முறையாக குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகத்தில் தேரோடும் வீதிகளில் இத்தகையை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தால் அது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

மின்வாரியத்தில் டெண்டர் அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல் இ.டெண்டர் முறையில் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு, பணி இடமாறுதல்களிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எந்த டெண்டரில் எந்த குறைபாடு இருந்தாலும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story