திருவள்ளூர் அருகே திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது 29 பவுன் நகை பறிமுதல்


திருவள்ளூர் அருகே திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது 29 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 29 July 2018 4:00 AM IST (Updated: 29 July 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 29 பவுன் நகைகள், 3 மடிக்கணினி, 4 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை போலீசார் கடந்த 17-ந் தேதியன்று போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா, நாகேந்திரன், சதீஷ்குமார் மற்றும் போலீசார் வேப்பம்பட்டு சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் சென்னை மாங்காடு கொலுமுனிவாக்கம் மங்களாபுரத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (வயது 22), சென்னை நெற்குன்றம் அண்ணாதுரை சாலை ஜெயலட்சுமி நகரை சேர்ந்த லட்சி என்கின்ற லட்சுமணன் (22) என்பது தெரியவந்தது.

போலீசாரிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக கூறினார்கள். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த ஒரு பையை திறந்து பார்த்தனர்.

அதில் தங்க நகைகளும், செல்போன்களும் இருந்தது தெரியவந்தது. அவர்கள் செவ்வாப்பேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 15 பேரின் வீடுகளுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது. மேலும் 2 செல்போன் பறிப்பு, 2 தங்கச்சங்கிலி பறிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் சைதாப்பேட்டை, பூந்தமல்லி, சங்கர்நகர், பல்லாவரம், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 2 பேரும் தாங்கள் திருடும் நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக சேமித்து வைத்து வீட்டு மனைகள் வாங்கி அதில் வீடு கட்டி சொகுசாக வாழ ஆசைப்பட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் அவர்களிடம் இருந்து 29 பவுன் தங்க நகைகளையும், 3 மடிக்கணினி, 4 விலை உயர்ந்த செல்போன்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விக்னேஷ் மற்றும் லட்சுமணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story