விருதுநகரில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
விருதுநகரில் குடிநீர் வினியோக மேம்பாட்டிற்காக கட்டிமுடிக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், பணி முடக்கம் அடைந்துள்ள மேலும் 2 குடிநீர் தொட்டிகளை விரைந்து பணி முடிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் குடிநீர் வினியோகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 2015–ம் ஆண்டு நகராட்சி நூற்றாண்டு விழாவை யொட்டி அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்த ரூ.25 கோடி சிறப்பு நிதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகளை கட்டுவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விருதுநகர் அகமதுநகர், கல்லூரிச் சாலை மற்றும் நாராயணமடம் தெருவில் 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு ஒப்பந்ததாரர்களிடம் வேலை உத்தரவு வழங்கப்பட்டது. இதில் அகமதுநகரில் 95 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ள நிலையில் கல்லூரிச் சாலையில் 70 சதவீத பணி முடிந்துள்ள நிலையில் பணி முடங்கிவிட்டது. நாராயணமடம் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை போட்டதோடு பணி தொடங்கப்படாத நிலையில் இந்த குடிநீர் தொட்டியை முதலில் திட்டமிட்டபடி மதுரை ரோட்டில் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அங்கு இன்னும் பணி தொடங்கப்படவில்லை.
நகரின் முக்கிய பிரச்சினையான குடிநீர் வினியோகத்தினை மேம்படுத்தவே அதிக கொள்ளளவு உள்ள 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகளை கட்டுவதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னரே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வராத நிலையிலும், கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையிலுமே உள்ளன. நகராட்சி நிர்வாகம் இந்த மேல்நிலை குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அக்கறை காட்டாதது ஏன் என்று தெரியவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபையின் பதவி காலம் முடிந்த பின்னரும் அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் நகராட்சி நிர்வாகம் இயங்கி வரும் நிலையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ள நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி திட்டப்பணிகளை விரைவு படுத்துவதற்கும், பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் நகரசபை அதிகாரிகள் பாராமுகமாக உள்ளதற்கான காரணம் தெரியவில்லை.
95 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டுள்ள அகமதுநகரில் உள்ள குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரிச் சாலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை விரைந்து பணி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், மதுரை ரோட்டில் கட்டப்பட உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணியை உடனடியாக தொடங்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, குடிநீர் மேம்பாட்டு பிரச்சினையில் நகரசபை நிர்வாகம் உரிய கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.