கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அச்சம்பட்டி கிராமத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 9 வகை கலவை சாதங்கள் வழங்கப்பட்டன. கலெக்டர் வீரராகவராவ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியிலேயே ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம் வீதம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சாதாரண நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு தாய் சேய் நலம், புற்றுநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள், வயது முதிர்ச்சியினால் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றிற்கு மருத்துவர்களைக் கொண்டு சிறப்பு முகாம் நடத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கும், முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கும் பரிந்துரை செய்யப்படுகிறார்கள். இதுவரை ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 39 முகாம்கள் ஆண்டுத்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் 39 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 8 முகாம்கள் முடிவடைந்துள்ளன. அதில் 8 ஆயிரத்து 134 பேர் சிகிச்சை பெற்று 87 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமங்கலம் சாத்தங்குடி கண்மாய் ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் செலவிலும், காங்கேயநத்தம் கண்மாய் ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் செலவிலும் குடிமராமத்து பணி நடக்கிறது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்து பேசினார். அப்போது அவர், ‘சாத்தங்குடி கண்மாய் சுமார் 258 ஏக்கர் பாசன வசதியும், காங்கேயநத்தம் கண்மாய் சுமார் 222 ஏக்கர் பாசன வசதியும் கொண்டதாகும். இங்கு நடைபெறும் குடிமராமத்து பணிகள் விரைவில் முடியும். குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு 2–வது மாநிலமாக திகழ்கிறது. ஜெயலலிதா என்ன திட்டங்களை செயல்படுத்த நினைத்தாரோ, அதனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி கொண்டு இருக்கிறார் என்றார்.
அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயகுமார், ‘வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற வேண்டும்‘ என்றார்