ராஜபாளையத்தில் நான்கு வழிச்சாலை: மத்திய அரசு திட்டத்தை மாற்ற தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சி பா.ஜனதா குற்றச்சாட்டு
ராஜபாளையத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கும் இடத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மாற்ற முயற்சிப்பதாக பா.ஜனதா மாநில செயலாளர் கரு.நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் பா.ஜனதா சார்பில் சொத்து வரி உயர்வு, நகராட்சி சுகாதாரக்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது..சேத்தூர், செட்டியார்பட்டி நகர பொறுப்பாளர்கள் ரங்கசாமி, குருசாமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக நகரத்தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் சுப.நாகராஜன். மாநில செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய அரசின் புறவழிச்சாலை திட்டம் மூலம் மதுரை– தென்காசி நான்கு வழிச்சாலை அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டனர்.
அப்போது கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராஜபாளையம் நகரின் மேற்கு வழிப் பாதையாக நான்கு வழிச்சாலை அமைய திட்டமிடப்பட்டிருந்தது. வன உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படும் என்பதால் கிழக்கு பகுதி வழியாக அமைக்க உள்ளோம். இந்த சாலை நகர் பகுதியில் இருந்து 2 கி.மீட்டருக்குள் அமைந்து விடும். ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் மத்திய அரசின் திட்டத்தை மாற்றி நகரில் இருந்து 10 கி.மீ.க்கு தொலைவில் சாலையை அமைக்க முயன்று வருகிறார். இது கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் திட்டப்படி சாலை அமைந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு பயனள்ளதாக இருக்கும் இவ்வாறு கூறினார்.