விருதுநகரில் கட்டப்படும் மேம்பாலத்தின் இருபுறமும் சேவை ரோடு அமைக்கப்படுமா? நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை


விருதுநகரில் கட்டப்படும் மேம்பாலத்தின் இருபுறமும் சேவை ரோடு அமைக்கப்படுமா? நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 29 July 2018 3:30 AM IST (Updated: 29 July 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரெயில்வே லெவல் கிராசிங்கில் கட்டப்படும் மேம்பாலத்தின் இருபுறமும் சேவைரோடு அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகரின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்ல பிரதான சாலையாக பயன்படுவது ராமமூர்த்தி ரோடு. இங்குள்ள ரெய்வே லெவல் கிராசிங்கால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 2016–ம் ஆண்டு மேம்பால கட்டுமான பணி தொடங்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதத்துக்குள் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் திட்டப்பணி இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்துவிடுமா என்று கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில் ரெயில்வே லெவல்கிராசிங் மேற்கு பகுதியில் மேம்பாலத்தின் இருபுறமும் சேவை ரோடு அமைப்பதற்கு போதுமான இடம் இல்லாத நிலை உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் சேவை ரோடு அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட முடிவில் அப்பகுதியில் வசிப்போர் எழுத்து பூர்வமாக மாவட்ட வருவாய் அதிகாரிக்கு தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் உள்ள கட்டிட உரிமையாளர்களிடம் நேரடியாக சென்று சேவை ரோட்டுக்கு தேவையான இடத்தை தருவது பற்றி அவர்கள் கருத்தை கேட்க முடிவு எடுத்தனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்த ஆனந்தகுமார் அப்பகுதிக்கு சென்று கட்டிட உரிமையாளர்களிடம் சேவை ரோடு அமைப்பது தொடர்பாக கருத்துகளை கேட்டறிந்தார். ஆனாலும் இது தொடர்பான உறுதியான முடிவு ஏதும் எடுக்க இயலாத நிலை தொடர்கிறது.

மேம்பாலத்தின் இருபுறமும் ரோட்டின் மேற்கு பகுதியில் சேவை ரோடு அமைக்க குறைந்த பட்சம் 3¼ மீட்டர் இடம் தேவைப்படும் நிலையில் அரசுக்கு சொந்தமான இடம் குறைவாக உள்ளதால் கட்டிட உரிமையாளர்களிடம் இடத்தை கேட்டு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. அப்பகுதியில் வசிப்போருக்கு வசதியாக வாகனங்கள் செல்லவும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்லவும் விதிமுறைப்படி சேவை ரோடு அமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.

அந்த பகுதியில் வசிப்பவர்களில் ஒரு சிலர் சேவை ரோடு அமைக்க இடம் தர ஒப்புதல் அளித்தாலும் மற்றும் சிலர் ஒப்புதல் அளிக்க தயங்கும் நிலையில் வேறுசிலர் அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் மேம்பாலத்தின் இருபுறமும் சேவை ரோடு அத்தியாவசிய தேவை ஆகும்.

எனவே நெடுஞ்சாலைத்துறையினர் அப்பகுதியில் விதிமுறைப்படி சேவை ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அதிகாரியும் இது குறித்து அப்பகுதி மக்களிடம் முறையாக ஒப்புதல் பெற உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story