சென்னிமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னிமலை பஸ் நிலையம் அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னிமலை,
சென்னிமலை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9–வது அட்டவணையில் சேர்த்திட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுக்கும் புகார்களை காலம் தாழ்த்தாமல், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்துறை மற்றும் வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கோழிப்பண்ணைகளை இழுத்து மூட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னிமலை பஸ் நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சென்னிமலை ஒன்றிய செயலாளர் மா.சுப்பிரமணி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர்கள் சிறுத்தை வள்ளுவன் (வடக்கு), அம்பேத்கார் (மேற்கு), ஈரோடு, திருப்பூர் மண்டல செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பெருந்துறை சட்டமன்ற தொகுதி செயலாளர் குணவளவன், துணை செயலாளர் ஈஸ்வரன், மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.