மந்திரி பங்கஜா முண்டேக்கு ஒரு மணிநேர முதல்-மந்திரி பதவி சிவசேனா சொல்கிறது


மந்திரி பங்கஜா முண்டேக்கு ஒரு மணிநேர முதல்-மந்திரி பதவி சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 29 July 2018 5:14 AM IST (Updated: 29 July 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா இடஒதுக்கீட்டை நிறைவேற்ற மந்திரி பங்கஜா முண்டேயை ஒரு மணி நேரம் முதல்-மந்திரியாக அமர வையுங்கள் என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

மராத்தா சமுதாயத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது.

இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளை விட, ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனா தான் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில் பீட் மாவட்டம் பார்லி பகுதியில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் பேசிய கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரி பங்கஜா முண்டே, “ மராத்தா இடஒதுக்கீடு குறித்த கோப்புகள் என் மேஜை மீது இருந்தால், நான் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றியிருப்பேன்” என கூறியிருந்தார்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் நேற்று வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

பங்கஜா முண்டேயின் வார்த்தைகளில் இருந்து அரசு தான் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினையை தாமதமாக்குகிறது என்பது தெரிகிறது.

அவரால் எந்த பிரச்சினையும் இன்றி இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முடியும் என்றால், பங்கஜா முண்டேயை குறைந்தது ஒரு மணி நேரமாவது முதல்-மந்திரி பதவியில் அமர வைக்கவேண்டும்.

அவர் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இடஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அவர் அரசியல் செய்ய முயற்சிக்கிறார் என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

குஜாராத்தில் படேல் சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம் நசுக்கப்பட்டது. இதற்காக போராடிய ஹர்த்திக் பட்டேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசு ஜெயிலில் அடைத்தது.

அரசு அதே பாணியில் தான் மாராட்டியத்தில் நடக்கும் மராத்தா சமுதாய போராட்டத்தையும் ஒடுக்க நினைக்கிறது. இதனால் மொத்த மராத்தா மக்களையும் வழிநடத்தும் தலைவர்கள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

தங்கர் மற்றும் மராத்தா சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் இதுகுறித்த கோப்புகள் பங்கஜா முண்டேவிடம் சென்றால், பிரச்சினை எளிதாக தீர்ந்துவிடும்.

மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அதிகாலை 3 மணி வரை உழைப்பதாக கூறியுள்ளார். இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது.

மராத்தா போராட்டம் அவர்களுக்கு தூக்கமற்ற இரவுகளை தந்திருக்கும்.

பங்கஜா முண்டேவிடம் கோப்புகளை நிறைவேற்றும் தைரியம் இருக்கிறது. எனவே முதல்-மந்திரி அந்த கோப்புகளை கண்டுபிடித்து மராத்தா சமுதாயத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story